பட்டா மாறுதல் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம்: முன்னாள் கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு


பட்டா மாறுதல் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம்: முன்னாள் கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 19 April 2017 4:15 AM IST (Updated: 18 April 2017 7:20 PM IST)
t-max-icont-min-icon

பட்டா மாறுதல் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் கணபதி (வயது 66). விவசாயி. இவர் நிலத்தை பட்டா மாறுதல் செய்வதற்காக கடந்த 2001–ம் ஆண்டு தோ.ஜேடர்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த பெரியசாமி (60) என்பவரை அணுகினார்.

அப்போது பெரியசாமி பட்டா மாறுதல் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இது குறித்து கணபதி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். பின்னர் கடந்த 2001–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24–ந் தேதி கணபதி, பெரியசாமியிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தபோது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பெரியசாமியை கைது செய்தனர்.

2 ஆண்டுகள் சிறை

பின்னர் அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி, குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பெரியசாமிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story