பண்ருட்டி அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை


பண்ருட்டி அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 19 April 2017 4:45 AM IST (Updated: 18 April 2017 7:25 PM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பண்ருட்டி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அந்த வகையில் பண்ருட்டி பகுதியிலும் ஏராளமான கடைகள் மூடப்பட்டது.

இதில் பண்ருட்டி அடுத்துள்ள காட்டாண்டிக்குப்பம் கிராமத்தில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த நிலையில் காடாம்புலியூரில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி மூடப்பட்டதால், அந்த கடையை இந்த கிராமத்தில் திறப்பதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர்.

முற்றுகை போராட்டம்

இதற்கென காட்டாண்டிக்குப்பம் கிராமத்தில் தனிநபருக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தை தேர்வு செய்து, அங்கு மதுபாட்டில்களை கொண்டு வந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இறக்கி வைத்தனர். தொடர்ந்து கடையில் அனைத்து பணிகளும் முடிவடைந்து, நேற்று மதியம் 12 மணிக்கு கடையை திறக்க அதிகரிகள் முடிவு செய்து இருந்தனர்.

இதுபற்றி அறிந்த கிராமத்து மக்கள் கடையின் முன்பு ஒன்று திரண்டு வந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கிராமத்தில் 2–வது கடை

அப்போது கிராமத்து பெண்கள் கூறுகையில், ஏற்கனவே எங்கள் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையால், தினசரி பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2–வது கடையை இங்கு திறக்க இருக்கிறார்கள். இந்த கடையை திறக்க விடமாட்டோம், மேலும் ஏற்கனவே இங்கு இயங்கி வரும் மற்றொரு கடையையும் மூடவேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார், இந்த கடையை அதிகாரிகள் திறக்க மாட்டார்கள் என்று உறுதியளித்தனர். இதையேற்று அனைவரும் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் அதிகளவில் பெண்கள் கலந்து கொண்டனர்.


Next Story