பண்ருட்டி அருகே காதல் திருமணம் செய்து வீடு திரும்பிய மகனின் மனைவிக்கு கொலை மிரட்டல் தந்தை உள்பட 4 பேர் கைது
பண்ருட்டி அருகே காதல் திருமணம் செய்து வீடு திரும்பிய மகனின் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 45). இவரது மகன் குருநாதன்(24). தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவர் பிளஸ்–2 பொதுத்தேர்வு எழுதியுள்ள 17½ வயதுள்ள ஒரு மாணவிக்கும் காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 8–ந்தேதி குருநாதன், மாணவியை திருப்பதூருக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு உடந்தையாக அதே பகுதியை சேர்ந்த திருப்பத்தூரை சேர்ந்த உறவினர்கள் பாஷா, பாலு மனைவி உஷா ஆகியோர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று குருநாதன் தான் காதல் திருமணம் செய்த மனைவியுடன் அங்குச்செட்டிப்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.
4 பேர் கைதுஅப்போது குருநாதனின் தந்தை ஆறுமுகம், உறவினர்கள் கண்ணன் மனைவி வள்ளி(39), சதீஷ் மனைவி தெய்வானை(37) சிலர் சேர்ந்து உன்னை வாழ விடமாட்டோம் என்று கூறி மாணவியின் கழுத்தில் இருந்த தாலியை அறுக்க முயற்சி செய்துள்ளனர். மேலும் அவரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து மாணவி பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் குருநாதன், பாலு, வள்ளி, தெய்வானை, ஆறுமுகம் மற்றும் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க உடந்தையாக இருந்த பாஷா, உஷா ஆகியோர் என்று மொத்தம் 7 பேர் மீது இன்ஸ்பெக்டர் தாமரைச்செல்வி வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம், குருநாதன், வள்ளி, தெய்வானை ஆகியோரை கைது செய்தார். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.