குடிநீர் பிரச்சினையை சமாளிக்க 200 புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன மாநகராட்சி ஆணையாளர் சந்தீப் நந்தூரி தகவல்
குடிநீர் பிரச்சினையை சமாளிக்க 200 புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாநகராட்சி ஆணையாளர் சந்தீப் நந்தூரி கூறினார்.
மதுரை,
மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் சீராக விநியோகிப்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம் அண்ணா மாளிகையில் நேற்று நடந்தது. துணை ஆணையாளர் மணிவண்ணன், நகர் பொறியாளர் மதுரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி ஆணையாளர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
வைகை அணையின் நீர் இருப்பு வெகுவாக குறைந்து வருகின்ற காரணத்தினால் மதுரை மாநகருக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையினை சரி செய்வதற்காக தற்போது வரை 200 புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீரினை சீராக விநியோகம் செய்யும் வகையில் தனியார் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளது.
270 குடிநீர் தொட்டிகள்ஒவ்வொரு மண்டலத்திற்குட்பட்ட வார்டு பகுதிகளில் உள்ள தெருக்களில் அமைப்பதற்காக 1,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட 185 குடிநீர் தொட்டிகளும், 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 குடிநீர் தொட்டிகளும், 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 35 சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகளும் என மொத்தம் 270 குடிநீர் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பொறியாளர்களும், தொழில்நுட்ப உதவியாளர்களும் வார்டு வாரியாக தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய தேவையான குடிநீர் லாரிகள், குடிநீர் தொட்டிகளை பெற்று குடிநீர் பிரச்சனை ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும்.
புதிதாக வாங்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளை இரண்டு நாட்களில் தேவையான இடங்களில் வைத்து மேலும் கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே உள்ள குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
100 வார்டுகள்ஏற்கனவே போடப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ள பழைய ஆழ்துளை கிணறுகளை செயல்படுத்த தொடங்க வேண்டும். புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு தேவையான மின் இணைப்பு வழங்குவதுடன் நீர் சேகரிக்கும் தொட்டிகளையும் விரைவாக அமைத்து இந்த மாத இறுதிக்குள் செயல்படுத்த தொடங்க வேண்டும். அடுத்த வாரத்திலிருந்தே குடிநீர் தொட்டிகள் மூலம் தெருவாரியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலும் குடிநீர் தொட்டிகள் மூலமாகவே குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். அப்போது தான் குடிநீர் லாரிகள் அதிகப்படியான இடங்களுக்கு செல்லமுடியும்.
பொறியாளர்கள் தங்களுக்கு தேவையான புதிய மின்மோட்டார்களை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டு பழுது ஏற்பட்டால் உடனடியாக மாற்றுவதற்கு தயாராக இருக்க வேண்டும். மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளிலும் குடிநீர் பிரச்சனை ஏற்படாத வகையில் அனைவரும் மனஉறுதியுடன் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் செயற்பொறியாளர்கள் அரசு, சேகர், சந்திரசேகர், ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சித்திரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.