சோழவந்தான் பகுதியில் பலத்த சூறாவளி காற்று மழையால் மின்கம்பங்கள் சேதம் வாழை, தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன


சோழவந்தான் பகுதியில் பலத்த சூறாவளி காற்று மழையால் மின்கம்பங்கள் சேதம் வாழை, தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன
x
தினத்தந்தி 19 April 2017 5:00 AM IST (Updated: 18 April 2017 7:59 PM IST)
t-max-icont-min-icon

சோழவந்தான் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

சோழவந்தான்,

சோழவந்தான் மற்றும் முள்ளிப்பள்ளம் ஆகிய பகுதிகளில் கிணற்று நீர் பாசன மூலம் வாழை, தென்னை, கொய்யா, அகத்திமரம் உள்ளிட்டவைகள் பயிரிடப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் மாலை திடீரென்று சூறாவளி காற்று வீசியதையடுத்து இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

இதில் முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளான கணேசமூர்த்தி, ஆனந்தன், கனி, முருகன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில் பலன் தரும் நிலையிலிருந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முப்பட்டை, ரஸ்தாலி, கற்பூரவள்ளி ஆகிய வாழைகள் முற்றிலும் சாய்ந்து விழுந்து சேதமானது. மேலும் முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த கருப்பாயி, வெங்கடேசன், ஜெகன், நாராயணசாமி ஆகியோருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இருந்த சுமார் 100–க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

மின்கம்பங்கள்

இதனால் அந்த பகுதியில் இருந்த 7 மின்கம்பங்கள் முறிந்து விழுந்து சேதமானது. இதே போல் சோழவந்தான் மற்றும் பேட்டை பகுதிகளில் 3 மின்கம்பங்கள் சேதமானது. முள்ளிப்பள்ளம் சுப்பிரமணியத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட கொய்யா மரங்கள், விவசாயி கண்ணனுக்கு சொந்தமான 500–க்கும் மேற்பட்ட அகத்தி மரங்களும் சாய்ந்து விழுந்து சேதமானது.

பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வேப்ப மரமும், கிராம வருவாய் அலுவலர் அருகே உள்ள புங்கைமரம் சாய்ந்ததால் அலுவலக மேற்கூரை சேதமடைந்தது. சேதமடைந்த பகுதிகளில் வருவாய், வேளாண் துறையினர் நேரில் சென்று சேதமதிப்பை கணக்கிட்டு வருகின்றனர். இந்த திடீர் சூறாவளி காற்று மழையினால் வாடிப்பட்டி ரோடு பகுதி மற்றும் நகரி ரோடு பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.


Next Story