சிவகங்கை, திருப்பத்தூர் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் முன்பு முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


சிவகங்கை, திருப்பத்தூர் பகுதிகளில்  டாஸ்மாக் கடைகள் முன்பு முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 April 2017 4:30 AM IST (Updated: 18 April 2017 8:02 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதகுபட்டி

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நெடுஞ்சாலை ஓரம் இருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. இதனையடுத்து அடைக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக கிராமப்புறங்களில் கடைகள் திறக்க முயற்சி நடந்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்திலும் பொதுமக்கள் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதேபோல் இருக்கின்ற டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்தநிலையில் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க.வினர் தெரிவித்திருந்தனர். அதன்படி நேற்று சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகள் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாகனேரி

சிவகங்கை அருகே உள்ள பாகனேரியில், நாட்டரசன்கோட்டை செல்லும் சாலையில் மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பாரதீய ஜனதா கட்சியினர் மற்றும் மகளிர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் சாமிநாதன், ஒன்றிய தலைவர் பாலமுருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பா.ஜ.க.வினர், மகளிர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பாகனேரியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, மதுபானங்களின் தீமைகள் குறித்து கோ‌ஷங்களை அவர்கள் எழுப்பினர். இந்த கடையை விரைவில் அகற்ற வேண்டும். இல்லை என்றால் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மகளிர் மன்ற தலைவி தாமரைச்செல்வி, நித்திய கல்யாணி, பா.ஜ.க. மாவட்ட பிரசார அணி தலைவர் ஐந்தரன், ஒன்றிய பொதுச் செயலாளர் அன்பழகன், நகர தலைவர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சிங்கம்புணரி

இதேபோல் சிங்கம்புணரியில் வண்ணாங்குண்டு மேற்கு பகுதியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். நகர தலைவர் வசீகரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது அங்கு வந்த கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் உத்தரவின்பேரில், சிங்கம்புணரி இன்ஸ்பெக்டர் பொன்ரகு தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜ.க.வினர் 15 பேரை கைது செய்தனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட பா.ஜ.க. சார்பில் சிவகங்கை வாரச்சந்தை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் கேப்டன் சரவணன், ராஜேந்திரன், கிருஷ்ணன், துரைராஜ், முத்துராமலிங்கம், மகளிர் அணியை சேர்ந்த சாந்தி, காமாட்சி உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 32 பேரை சிவகங்கை நகர் போலீசார் கைது செய்தனர்.


Next Story