அம்பை, விக்கிரமசிங்கபுரம் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம் கலெக்டர் ஆய்வு


அம்பை, விக்கிரமசிங்கபுரம் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 19 April 2017 3:00 AM IST (Updated: 18 April 2017 9:05 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டம், அம்பை மற்றும் விக்கிரமசிங்கபுரம் நகரசபை பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சுகாதார பணிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் பணிகளை கலெக்டர் கருணாகரன் நேற்று ஆய்வு செய்தார்.

நெல்லை,

நெல்லை மாவட்டம், அம்பை மற்றும் விக்கிரமசிங்கபுரம் நகரசபை பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சுகாதார பணிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் பணிகளை கலெக்டர் கருணாகரன் நேற்று ஆய்வு செய்தார்.

கொசு ஒழிப்பு பணி


அம்பை கன்னிவிநாயகர் கோவில் தெரு, மேலப்பாளையம் தெரு ஆகிய பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி நேற்று நடைபெற்றது. இதனை கலெக்டர் கருணாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அங்கு பல்வேறு வீடுகளுக்கு சென்று கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்படுகிறதா?, வீடுகளில் உள்ள தொட்டிகளில் நல்ல நீரில் முறையாக கொசுப்புழு ஒழிப்பு ‘‘அபேட்’’ மருந்து ஊற்றப்படுகிறதா? என அவர் ஆய்வு செய்தார். வீடுகளில் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்ட விவரத்தையும் பொதுமக்களிடம் விசாரித்தார்.

தொடர்ந்து மேலப்பாளையம் தெரு பகுதியில் உள்ள ஆங்கில மாதிரி பள்ளிக்கூடத்தில் நடைபெற்று வரும் சிறப்பு மருத்துவ முகாமையும் கலெக்டர் பார்வையிட்டார்.

விக்கிரமசிங்கபுரம்

இதை தொடர்ந்து விக்கிரமசிங்கபுரம் நகரசபையிலுள்ள அய்யனார்குளம் பகுதியில், டெங்கு கொசு ஒழிப்பு பணிகளையும், சிறப்பு மருத்துவ முகாமையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

பின்னர், கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:– நெல்லை மாவட்டத்தில் புளியங்குடி மற்றும் கடையநல்லூர் நகரசபை பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த பகுதி மட்டுமின்றி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது அம்பாசமுத்திரம் மற்றும் விக்கிரமசிங்கபுரம் நகரசபை பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் சித்த மருத்துவ பிரிவின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

15 நாட்களுக்குள்...

கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை தினசரி ஆய்வு செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விழிப்புணர்வு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீவிர கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் டெங்கு கொசுக்களை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராம்கணேஷ், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாணிக்கத்தாய், நகரசபைகளின் மண்டல இயக்குனர் பூங்கொடி அருமைகண், நகரசபை ஆணையாளர்கள் பவுன்ராஜ், (அம்பை), தாணுமூர்த்தி (விக்கிரசிங்கபுரம்), சேரன்மகாதேவி ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், மாவட்ட சுகாதார கல்வி அலுவலர் அப்துல்காதர், அம்பை தாசில்தார் வெங்கட்ராமன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story