மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் முன்பு பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் 141 பெண்கள் உள்பட 535 பேர் கைது


மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் முன்பு பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் 141 பெண்கள் உள்பட 535 பேர் கைது
x
தினத்தந்தி 19 April 2017 4:15 AM IST (Updated: 18 April 2017 9:06 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியை சேர்ந்த 141 பெண்கள் உள்பட 535 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்,

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி நேற்று பாரதீய ஜனதா கட்சி சார்பில் டாஸ்மாக் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் கே.கே.சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நேற்று பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதற்கு விழுப்புரம் கிழக்கு மாவட்ட தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். கோட்ட பொறுப்பாளர் மனோகரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராம.ஜெயக்குமார், சுகுமார், துரை.சக்திவேல், மாநில செயற்குழு உறுப்பினர் திருச்செல்வம், வணிகர் அணி கோட்ட பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், நகர தலைவர் பழனி, மாவட்ட அறிவுசார் பிரிவு தலைவர் தனசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் விழுப்புரம் மேற்கு போலீசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 37 பேரை கைது செய்து விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தள்ளுமுள்ளு

இதேபோல் செஞ்சி செட்டிப்பாளையம் குளக்கரை அருகே உள்ள மதுக்கடையை மூடக்கோரி பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர் அன்பழகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் திருமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், நகர தலைவர் ரமேஷ், பிரசார அணி பசுமலை உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தனர். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த செஞ்சி போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் இந்த கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை என்றும், வேறு கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளுமாறு கூறினர். அதற்கு பா.ஜ.க.வினர் மறுப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி காந்தி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பா.ஜ.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சர்தார்சிங் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ராஜேஷ், துணை செயலாளர் நதியா, மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் பாலசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து பா.ஜ.க.வினர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 22 பெண்கள் உள்பட 48 பேரை கைது செய்தனர்.

சங்கராபுரத்தில் பூட்டை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி சங்கராபுரம் ஒன்றிய தலைவர் செல்வகணபதி தலைமையில் பா.ஜ.க.வினர் கடையின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சங்கராபுரம் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 35 பேரை கைது செய்தனர்.

தியாகதுருகம்

இதேபோல் தியாகதுருகத்தில் திருக்கோவிலூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு மாவட்ட விவசாய அணி தலைவர் பச்சையாப்பிள்ளை தலைமையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தியாகதுருகம் நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து தியாகதுருகம் போலீசார் 16 பேரை கைது செய்தனர்.

ரிஷிவந்தியம் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் லா.கூடலூர் கிராமத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி மாவட்ட இளைஞரணி தலைவர் ரவி தலைமையில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பா.ஜ.க.வினர் 24 பேரை பகண்டை போலீசார் கைது செய்தனர்.

உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை திருநாவலூர் போலீசார் கைது செய்தனர். மேலும் எலவனாசூர்கோட்டையில் ஒன்றிய தலைவர் நளின்குமார் தலைமையில் டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம்

இதேபோல் திண்டிவனத்தில் நகர செயலாளர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரும், விக்கிரவாண்டியில் ஒன்றிய தலைவர் ரவி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரும், ஒலக்கூரில் மாநில மகளிர் அணி செயலாளர் பூவழகி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 12 பேரும், பிரம்மதேசத்தில் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரும், மேல்மலையனூரில் ஒன்றிய தலைவர் சீனுவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 27 பேரும், கஞ்சனூரில் ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அரகண்டநல்லூர்

மேலும் அரகண்டநல்லூரில் ஒன்றிய செயலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 45 பேரும், மணலூர்பேட்டையில் நகர செயலாளர் ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரும், பெருவங்கூரில் நகர பொதுச்செயலாளர் இளையராஜா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 40 பேரும், சின்னசேலம், கீழ்குப்பத்தில் ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 54 பெண்கள் உள்பட 87 பேரும், பெரியதச்சூரில் ஒன்றிய தலைவர் அய்யப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரும், திருவெண்ணெய்நல்லூரில் நகர தலைவர் சாய்கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரும் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 141 பெண்கள் உள்பட 535 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் அனைவரும் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story