மலைச்சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்புச்சுவரில் மோதி நின்ற சுற்றுலா பஸ்
மலைச்சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்புச்சுவரில் மோதி நின்ற சுற்றுலா பஸ் அதிர்ஷ்டவசமாக 40 மாணவ–மாணவிகள் உயிர் தப்பினர்
தேவதானப்பட்டி,
மலைச்சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய சுற்றுலா பஸ் தடுப்புச்சுவரில் மோதி நின்றது. இதனால் அதில் பயணம் செய்த 40 மாணவ–மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சுற்றுலாமதுரையில், அரசு பணியாளர்களுக்கான தேர்வு எழுதும் மாணவ–மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் 40 மாணவ–மாணவிகள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று ஒரு தனியார் சுற்றுலா பஸ்சில் அவர்கள் கொடைக்கானல் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
பஸ்சை மதுரையை சேர்ந்த ரகுபதி (வயது 32) என்பவர் ஓட்டினார். டம்டம் பாறை அருகே மலைச்சாலையில் சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. அப்போது டிரைவர் அதனை கட்டுக்குள் கொண்டுவர போராடினார். இதற்கிடையே சாலையைவிட்டு விலகிய பஸ் அருகே உள்ள தடுப்புச்சுவரில் மோதியது.
மாணவ–மாணவிகள் உயிர் தப்பினர்ஆனால் அதற்குள் டிரைவர் பிரேக் போட்டதால் பஸ்சின் முன்பகுதி மட்டும் தடுப்புச்சுவரை தாண்டி நின்றது. இதைப்பார்த்த மாணவ–மாணவிகள் அலறி அடித்தபடி பஸ்சின் பின்பக்க கதவு வழியாக வெளியேறினர். இதனால் அங்குள்ள 500 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்வது தடுக்கப்பட்டது. மேலும் மாணவ–மாணவிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த தேவதானப்பட்டி போலீசார் விரைந்து சென்று பஸ்சை மீட்க நடவடிக்கை எடுத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோர தடுப்பில் மோதி சுற்றுலா பஸ் நின்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.