வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் பகலில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம்


வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் பகலில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம்
x
தினத்தந்தி 19 April 2017 4:30 AM IST (Updated: 19 April 2017 12:38 AM IST)
t-max-icont-min-icon

வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் பகலில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் தேனி கலெக்டர் அறிவிப்பு

தேனி,

தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், பகல் வேளைகளில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–

வெயிலின் தாக்கம்

தமிழக பேரிடர் மேலாண்மை அறிக்கையில், கடந்த 137 ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெப்பம் அதிகம் இருக்கக்கூடும் எனவும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவும், அனல் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு பொதுமக்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்திட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாக்க தினமும் அதிகமாக குடிநீர் பருகிட வேண்டும். இரவு நேரங்களில் வீட்டில் உள்ள ஜன்னல் கதவுகளை திறந்து வைத்திட வேண்டும். அதே நேரத்தில் வீட்டுக்குள் பாதுகாப்பு நலன் கருதி, ஜன்னலில் வலை அடித்துக் கொள்ளலாம். இதன் மூலம், வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

பாதுகாப்பு

பொதுமக்கள் உடுத்தும் ஆடைகள் எடை குறைவாகவும், தளர்வாகவும் இருக்க வேண்டும். பருத்தி ஆடைகளை உடுத்துவது உடலுக்கு நல்லது. வெளியில் செல்லும் போது குளிர் கண்ணாடி, காலணி மற்றும் தொப்பி அணிந்து செல்ல வேண்டும். தயங்காமல் குடை எடுத்துச் செல்ல வேண்டும். கால்நடைகளை கொட்டகையில் வைத்து பராமரித்திட வேண்டும்.

தேநீர், குளிர்பானங்களை தவிர்த்து, இளநீர், மோர், எலுமிச்சை சாறு கலந்த நீர் மற்றும் வெயிலுக்கு ஏற்ற பானங்களை பருகி வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உடல் சோர்வுற்றாலோ, வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் இருந்தாலோ அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களான பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story