மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு: விளக்குமாறுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு: விளக்குமாறுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 April 2017 5:30 AM IST (Updated: 19 April 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் விளக்குமாறுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பி.எஸ்.என்.எல். தொலைபேசி அலுவலகத்திற்கு அருகே அய்யனார்நகர் உள்ளது. இந்த நகரில் சுமார் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பொதுமக்கள் மூங்கில் கூடை பின்னுவது, விளக்குமாறு தயாரிப்பது உள்ளிட்ட கைத்தொழில்கள் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் வேடசந்தூரில் பழனி ரோட்டில் செயல்பட்டு வந்த மதுக்கடை சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி மூடப்பட்டது. இதையடுத்து இந்த கடையை அய்யனார்நகரில் அமைக்க டாஸ்மாக் பணியாளர்கள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில் அங்கு மதுக்கடை அமைத்தால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். எனவே அங்கு மதுக்கடை அமைக்கக்கூடாது என்று கூறினர். எனினும் டாஸ்மாக் அதிகாரிகள் அங்கு மதுக்கடை அமைப்பதில் திட்டவட்டமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விளக்குமாறுடன் திரண்டு வந்து மதுரைவீரன் கோவில்முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மதுக்கடை அமைக்கக்கூடாது என்று கூறி கோ‌ஷங்களை எழுப்பினர். சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பின்னர் கலைந்து சென்றனர். விளக்குமாறுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story