கூடலூர் மக்களின் தாகம் தணிக்க பாண்டியாறு கைகொடுக்குமா?


கூடலூர் மக்களின் தாகம் தணிக்க பாண்டியாறு கைகொடுக்குமா?
x
தினத்தந்தி 19 April 2017 4:30 AM IST (Updated: 19 April 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் மக்களின் தாகம் தணிக்க பாண்டியாறு கைகொடுக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

கூடலூர்

மலைப்பாங்கான பள்ளத்தாக்குகளும், சமவெளி பகுதியையும் கொண்டது கூடலூர். தமிழகம், கேரளா– கர்நாடகா என 3 மாநிலங்கள் இணையும் பகுதியில் உள்ளதால் அடர்ந்த வனங்களும், பசுமை நிறைந்த தேயிலை தோட்டங்களும், எண்ணற்ற கிளை ஆறுகளும் இங்கு உள்ளன. இந்தியாவிலேயே சிரபுஞ்சிக்கு அடுத்தபடியாக கூடலூர் தேவாலா பகுதியில் மழை அதிகம் பெய்வதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் தென்னகத்தின் நீர் தொட்டி, ஆக்சிஜன் வங்கி என இயற்கை ஆர்வலர்கள் கூடலூரை அழைக்கின்றனர்.

ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, காபி, குறுமிளகு என பணப்பயிர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைவிக்கப்படுகிறது. அன்னிய செலாவணியை ஈட்டும் வகையில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடலூர், ஓவேலி, நடுவட்டம் பகுதியில் உற்பத்தியாகும் தண்ணீர் பல கிளை ஆறுகளாக பிரிந்து பாண்டியாறு வழியாக கேரளாவுக்குள் பாய்கிறது.

பொய்த்துபோன பருவமழை

இதேபோல் நடுவட்டம், கூடலூர், முதுமலை, மாயாறு வழியாக பவானிசாகர் அணைக்கு தண்ணீர் செல்கிறது. ஆண்டுதோறும் பருவம் தவறாமல் பெய்யும் மழையால் வற்றாத ஜீவ நதிகள் ஓடக்கூடிய கூடலூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக போதிய பருவமழை பெய்யவில்லை. காடுகளின் பரப்பளவு குறைதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மழையின் அளவு வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் தற்போது வறட்சியின் தாக்கம் அதிகமாக உள்ளது.

கூடலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் சுமார் 60 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக ஓவேலி பகுதியில் உள்ள குயின்ட், ஆத்தூர் (ஹெலன்), பல்மாடி பகுதியில் தடுப்பணைகள் கட்டப்பட்டு ராட்சத குழாய்கள் மூலம் கூடலூருக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் கடந்த 2010–2011–ம் ஆண்டு ரூ.6 கோடி செலவில் கூடலூர் அருகே பாண்டியாற்றில் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது.

வறண்டுவிடும் அபாயம்

இந்த ஆற்றில் ஓடும் தண்ணீரை மின்மோட்டார்கள் மூலம் உறிஞ்சி எடுத்து, அதனை நீரேற்று நிலையங்களுக்கு கொண்டு வந்து, சுத்திகரிப்பு செய்து நகர மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது மழை இல்லாமல் அனைத்து கிளை ஆறுகளும் வறண்டு விட்டதால் பாண்டியாற்றிலும் தண்ணீர் வரத்து அடியோடு குறைந்து விட்டது.

இதனால் கூடலூர் பகுதியில் குடிநீர் பிரச்சினை தலைதூக்கி உள்ளது. தற்போது குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண பாண்டியாற்றில் தடுப்பணை அமைத்து அதில் தேங்கும் தண்ணீரைக்கொண்டு, தட்டுப்பாடு அதிகம் உள்ள பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் வறட்சியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தடுப்பணைகளில் தண்ணீர் தேக்க நிலை குறைந்தால், பாண்டியாறும் தண்ணீர் இல்லாமல் வறண்டு விடக்கூடிய அபாயம் உள்ளது. இது குறித்து கூடலூர் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:–

கூடுதல் தடுப்பணைகளை கட்ட கோரிக்கை

கூடலூர் நகரில் நாளுக்குநாள் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இருப்பினும் இந்த பிரச்சினைக்கு தற்காலிகமாக தீர்வு காணும் வகையில் நகராட்சி மற்றும் வாடகை லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கூடலூர் பகுதியில் நீராதாரம் உள்ள இடங்களை கண்டறிந்து இனி வரும் காலங்களில் கூடுதலாக தடுப்பணைகளை கட்ட வேண்டும். அதன் மூலம் நிலத்தடி நீர்மட்டமும் குறையாமல் இருக்கும். மேலும் மனிதர்கள், விலங்குகளுக்கும் கோடை காலங்களிலும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கும். தற்போது தண்ணீர், பசுந்தீவனங்கள் இல்லாமல் வனவிலங்குகளும் ஊருக்குள் அதிகளவு வருகிறது. வறட்சியால் காட்டு யானைகள் பல இறந்து விட்டன. எனவே நீண்ட தொலைநோக்கு திட்டங்களை நகராட்சி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தாகம் தணிக்குமா?

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கூடலூர் பகுதி மக்களின் நீராதாரமாக திகழக்கூடிய குடிநீர் திட்ட தடுப்பணைகளில் தண்ணீர் இல்லை. நகராட்சி பகுதியில் சுமார் 49 குடிநீர் கிணறுகள் உள்ளது. இதில் பெரும்பாலான கிணறுகளில் தண்ணீர் இல்லை. தற்சமயம் பாண்டியாறு, தொரப்பள்ளி ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. மழை தொடர்ந்து பெய்தால் மட்டுமே குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். எனவே பொதுமக்களும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.

மழை பெய்து பாண்டியாறு, குயின்ட், ஆத்தூர் உள்ளிட்ட தடுப்பணைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து கூடலூர் மக்களின் தாகம் தணிக்குமா? என்பது எதிர்பார்ப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story