தாவணகெரே அருகே தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தையை எரித்துக் கொன்ற கிராம மக்கள் போலீசார் விசாரணை


தாவணகெரே அருகே தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தையை எரித்துக் கொன்ற கிராம மக்கள் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 19 April 2017 5:15 AM IST (Updated: 19 April 2017 1:16 AM IST)
t-max-icont-min-icon

தாவணகெரே அருகே தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தையை கிராம மக்கள் எரித்துக் கொன்றனர்.

சிக்கமகளூரு,

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுத்தை அட்டகாசம்

தாவணகெரே தாலுகா ஜகலூர் அருகே மாகடி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி சிறுத்தை ஒன்று வெளியேறி கிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. அந்த சிறுத்தை, கிராமத்தில் புகுந்து ஆடு, மாடு, கோழிகளை அடித்து கொன்று வந்தது. இதனால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் இருந்து வந்தனர். இதுகுறித்து மாகடி கிராம மக்கள், வனத்துறையினரிடம் பலமுறை புகார் கொடுத்தனர். வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனாலும், அவர்களால் சிறுத்தையை பிடிக்க முடியவில்லை. இதனால் அந்தப்பகுதி மக்கள் சிறுத்தையை கொல்ல முடிவு செய்தனர்.

எரித்துக் கொன்றனர்

இந்த நிலையில் நேற்று முன்தினம் கிராமத்தையொட்டி கிராம மக்கள் ஆட்டுப்பட்டி அமைத்தனர். இந்த ஆட்டுப்பட்டிக்கு வந்து ஆடுகளை கொல்ல வரும் சிறுத்தையை மரத்தின் மீது இருந்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல திட்டம் தீட்டினர். அதன்படி ஆட்டுப்பட்டி அருகே உள்ள மரத்தில் 3 பேர் பெட்ரோலுடன் ஏறி அமர்ந்து கொண்டனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே நேற்று முன்தினம் ஆடுகளை அடித்து சாப்பிடுவதற்காக சிறுத்தை ஆட்டுப்பட்டி அருகே வந்தது.

அப்போது மரத்தில் இருந்த 3 பேர், மேலே இருந்து சிறுத்தை மீது பெட்ரோலை ஊற்றினர். இதனால் சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. அப்போது கீழே மறைந்திருந்த சிலர், சிறுத்தை மீது தீப்பந்தத்தை தூக்கி வீசினர். இதில், சிறுத்தை மீது தீப்பிடித்து எரிந்தது. அந்த தீயுடன் சிறுத்தை சிறிது தூரம் ஓடி சென்று கீழே விழுந்து உடல் கருகி பரிதாபமாக செத்தது.

போலீஸ் விசாரணை

தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை செத்ததால் அந்தப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினரும், ஜகலூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதுதொடர்பாக போலீசார் கிராம மக்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தையை கிராம மக்கள் எரித்துக் கொன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story