மதுக்கடை நிரந்தரமாக மூடக்கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டம்: 240 பேர் கைது


மதுக்கடை நிரந்தரமாக மூடக்கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டம்: 240 பேர் கைது
x
தினத்தந்தி 19 April 2017 5:00 AM IST (Updated: 19 April 2017 1:26 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே மணிகண்டபுரத்தில் மதுக்கடை நிரந்தரமாக மூடக்கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டம் செஞ்சேரிமலையில் 240 பேர் கைது

கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவு அருகே மணிகண்டபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடையை நிரந்தரமாக மூடக் கோரி ஜனநாயக மாதர்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.செஞ்சேரிமலையில் மதுக்கடைக்கு எதிராக போராடிய 240 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுக்கடை திறக்க எதிர்ப்பு

கிணத்துக்கடவில் கோவை –பொள்ளாச்சி மெயின் ரோட்டில் இருந்த 3 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதே போல் தாமரைக்குளத்தில் இருந்த ஒரு மதுகடையும் மூடப்பட்டது. தற்போது மணிகண்டபுரத்தில் ஒரு மதுக்கடையும், மற்றொரு மதுக்கடை சிக்கலாம்பாளையத்தில் இருந்து சொக்கனூர் செல்லும் வழியிலும் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் மணிகண்டபுரத்தில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் கிணத்துக்கடவு தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதையும் மீறி கடந்த 10–ந்தேதி வடபுதூர் ஊராட்சி மணிகண்டபுரதில் மதுக்கடை திறக்கப்பட்டது. அப்போது கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.

முற்றுகையிட்டனர்

இந்த நிலையில் மணிகண்டபுரத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை நேற்று மதியம் 12 மணிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்க மாவட்ட செயலாளர் ராதிகா, பொருளாளர் ஜோதிமணி, கிணத் துக்கடவு செயலாளர் விஜயா, தலைவர் ரேவதி, பொருளாளர் சித்ரா மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் மணிகண்டபுரத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை முன் தார்ப்பாய் கட்டி தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது மதுக்கடைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தி இருந்தனர். மேலும் டாஸ்மாக் மதுக்கடையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இது குறித்த தகவலின் பேரில் கிணத்துக்கடவு தலைமையிடத்து துணை தாசில்தார் முருகானந்தம், போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமேனி, சப்–இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன், வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், கிராம நிர்வாக அதிகாரி சற்குணம், செல்வக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எழுத்துப்பூர்வ உறுதிமொழி

அப்போது பொதுமக்கள் கூறுகையில், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி இங்கு மதுக்கடை திறக்கப்பட்டு உள்ளது. இந்த மதுக்கடை வழியாக தான் பள்ளி, கோவில்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் பெண்கள் உள்பட பொதுமக்களுக்கு பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சிலர் மது குடித்து விட்டு நடுரோட்டில் தகராறு செய்தபடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும். இதை, டாஸ்மாக் நிர்வாகத்தினர் எழுத்துப்பூர்வமாக உறுதிகொடுத்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும். இல்லை என்றால் போராட்டம் தொடரும் என்றனர்.

எனவே போலீசார், வருவாய் துறை, டாஸ்மாக் அதிகாரிகள் உள்ளிட்டோரும் பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

செஞ்சேரிமலையில் 240 பேர் கைது

சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலையில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில், மலையடிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி செல்லும் வழியிலும் உள்ளது. எனவே அந்த டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரி நேற்று காலை கோவை வடக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது.

இதில், மாவட்ட தலைவர் மோகன் மந்திராசலம், பொருளாளர் தங்கவேல், மாவட்ட பார்வையாளர் துரைசாமி, ஒன்றிய பொதுச்செயலாளர் சபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட 110 பெண்கள் உள்பட மொத்தம் 240 பேரை சூலூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.


Next Story