வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 19 April 2017 4:15 AM IST (Updated: 19 April 2017 1:26 AM IST)
t-max-icont-min-icon

வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி நாகையில் 2-வது நாளாக விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

வேலைவாய்ப்பு இன்றி பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி நாகை அவுரித்திடலில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர்கள் சிவசாமி, ஜெகநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில குழு உறுப்பினர் மல்லிகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் தமீம்அன்சாரி, நாகை ஒன்றிய செயலாளர் பாண்டியன், திருமருகல் ஒன்றிய செயலாளர் பாபுஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் சரபோஜி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் பெரியசாமி கலந்து கொண்டார்.

வறட்சி நிவாரணம்

போராட்டத்தில், வேலை வாய்ப்பு இன்றி பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். மாதந்தோறும் வழங்கும் விலையில்லா அரிசியை 30 கிலோவாக உயர்த்தி வழங்க வேண்டும்.

ஆண்டு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.400 வழங்க வேண்டும். இந்த திட்டத்தை பேரூராட்சிகளுக்கும், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் எம்.பி. செல்வராசு நன்றி கூறினார்.


Next Story