60 வயதான அரச மரம் வேருடன் பிடுங்கி சிறை வளாகத்தில் நடப்பட்டது


60 வயதான அரச மரம் வேருடன் பிடுங்கி சிறை வளாகத்தில் நடப்பட்டது
x
தினத்தந்தி 19 April 2017 4:00 AM IST (Updated: 19 April 2017 1:26 AM IST)
t-max-icont-min-icon

கோவை பார்க்கேட் அருகே இருந்த 60 வயதான அரச மரம் வேருடன் பிடுங்கி சிறை வளாகத்தில் நடப்பட்டது.

கோவை,

கோவை காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் பார்க்கேட்டில் இருந்து ஆம்னி பஸ்நிலையம் வரை மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் பார்க்கேட்டில் உள்ள சிக்னல் அருகே ரவுண்டானா அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு இதன் அருகே ரோட்டின் ஓரத்தில் இருந்த தனியார் கட்டிடம் இடிக்கப்பட்டது. அதில் அரசமரம், வேப்பமரம் மற்றும் 2 அசோக மரங்களை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட முடிவு செய்யப்பட்டது.

வேருடன் பிடுங்கப்பட்டது

இதற்காக நேற்று காலையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள், கோவை மாநகர போக்குவரத்து போலீசார் மற்றும் ஓசை அமைப்பு நிர்வாகிகள் ஆகியோர் அங்கு வந்தனர். முதலில் அரச மரத்தை பிடுங்க முடிவு செய்து காலை 11 மணிக்கு அந்த மரத்தைச் சுற்றிலும் குழி தோண்டப்பட்டு, அந்த மரம் வேருடன் பிடுங்கி, ராட்சத கிரேன் மூலம் லாரியில் ஏற்றப்பட்டது.

இந்த பணியை கோவை மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அந்த மரத்தை கோவை மாநகர போலீஸ் பயிற்சி மைதானத்தில் நட முடிவு செய்யப்பட்டு அதற்கான அனுமதியும் வாங்கி அங்கு குழியும் தோண்டப்பட்டது. ஆனால் அங்கு பாறை அதிகமாக இருந்தது. இதையடுத்து அங்கு அந்த மரத்தை நட முடியவில்லை.

சிறை வளாகத்தில் நடப்பட்டது

பின்னர் அந்த மரத்தை கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் அருகே நட முடிவு செய்யப்பட்டு 18 அடி நீள, அகலத்தில் குழி தோண்டப்பட்டது. தொடர்ந்து அந்த மரத்தை ஊழியர்கள் லாரி மூலம் அங்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது சிறையின் நுழைவு வாசலில் இருந்த பெயர் பலகை மரத்தின் மீது இடித்ததால் உள்ளே கொண்டு செல்ல முடியவில்லை.

அதைத்தொடர்ந்து அந்த மரத்தை லாரியில் இருந்து கீழே இறக்கி, கிரேன் மூலம் தூக்கி உள்ளே கொண்டு செல்லப்பட்ட பின்னர், லாரி மீது ஏற்றி, நடும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் இரவு 7.15 மணிக்கு அந்த மரம் அங்கு நடப்பட்டது.

இதுகுறித்து ஓசை அமைப்பை சேர்ந்த செய்யது கூறியதாவது:–

60 வயது மரம்

கோவையில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டதால் கடும் வெயில் வதைத்து வருகிறது. எனவே தான் மரங்களை வெட்ட நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். தற்போது இங்கிருந்து கொண்டு செல்லப்படும் அரச மரத்துக்கு 60 வயது ஆகிறது. அந்த மரம் 3 மாதத்துக்குள் துளிர்விட்டு வளர வாய்ப்பு இருக்கிறது.

மேலும் அந்தப்பகுதியில் இருக்கும் வேப்பமரம் மற்றும் 2 அசோக மரம் இன்னும் ஓரிரு நாட்களில் பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும். கோவை மாவட்டத்தில் எந்தப்பகுதிகளிலாவது மரங்கள் வெட்டப்படுவது தெரியவந்தால் பொதுமக்கள் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். நாங்கள் இதுவரை 400 மரங்களை பிடுங்கி வேறு இடத்தில் நட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story