பணத்திற்காக தாயை கொல்ல முயன்ற வாலிபர் நண்பனுடன் கைது போரிவிலியில் பயங்கரம்
போரிவிலில் பணத்திற்காக தாயை கொலை செய்ய முயன்ற வாலிபரை நண்பனுடன் போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை போரிவிலி மேற்கு, தர்மா மாலிசால் பகுதியை சேர்ந்தவர் மீனா(வயது 46). இவரது மகன் தைர்யா(18). இவரின் வீட்டிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தைர்யாவின் நண்பன் ஜெபராஜ் டேவிட் (19) வந்தார். தைர்யாவும், நண்பனும் பேசிக்கொண்டு இருந்தனர். இதையடுத்து மீனா காபி போடுவதற்காக சமையல் அறைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஜெபராஜ் டேவிட் மீனாவை கத்தியால் குத்தினார்.
மீனாவின் அலறல் சத்தம்கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மகனே திட்டம்போட்டது அம்பலம்தகவல் அறிந்து வந்த போலீசார் முதலில் மீனாவின் மகன் தைர்யாவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில் அவர் திட்டம்போட்டு தாயை கொலை செய்ய முயன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:–
தைர்யா எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் பணம்கேட்டு தாயிடம் சண்டைபோட்டு வந்துள்ளார். ஆரம்பத்தில் மீனா மகனுக்கு பணம் கொடுத்து வந்தார். ஆனால் அவன் சூதாட்டத்தில் ஈடுபட்டதை அறிந்த பின்னர் அவர் மகனுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தினார்.
கைதுஇது தைர்யாவிற்கு தாய் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவர் தாயை கொலை செய்து வீட்டில் இருந்த பணம், சொத்தை அபகரிக்க திட்டமிட்டார். எனவே அவர் நண்பர் மூலம் தாயை கொலை செய்து, கொள்ளை நாடகமாட முடிவு செய்து இருந்தார். ஆனால் அவரின் சதித்திட்டம் நிறைவேறாததால் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
பணத்திற்காக மகனே தாயை கொலை செய்ய முயன்ற சம்பவம் போரிவிலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தைர்யா, அவரது நண்பர் ஜெபராஜ் டேவிட் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.