வெம்பக்கோட்டை பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படாத நிலை


வெம்பக்கோட்டை பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படாத நிலை
x
தினத்தந்தி 19 April 2017 1:30 AM IST (Updated: 19 April 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை பகுதியில் பல இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் இன்னமும் அகற்றப்படாமலேயே உள்ளன.

தாயில்பட்டி,

ஐகோர்ட்டின் அதிரடியான உத்தரவினை தொடர்ந்து சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி பல இடங்களில் தீவிரமாக நடந்து வரும் நிலையில் வெம்பக்கோட்டை பகுதியில் இந்த பணி மிகவும் மந்த கதியிலேயே நடந்து வருகிறது. இன்னும் பல இடங்களில் அதனை அகற்றுவதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

வல்லம்பட்டி-ஜெகவீரம்பட்டி ரோடு, மஞ்சள் ஓடைப்பட்டி- சூரார்பட்டி ரோடு, துலுக்கன்குறிச்சி- குகன்பாறை ரோடு, குகன்பாறை- செவல்பட்டி ரோடு, ராமுதேவன்பட்டி-லட்சுமியாபுரம் ரோடு, கண்மாய்ப்பட்டி- வலையப்பட்டி ரோடு உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் உள்ளன. ரோடுவரை வளர்ந்து நிற்கும் இந்த மரக் கிளைகள் பஸ்களில் ஜன்னலோர இருக்கையில் பயணம் செய்வோரை காயப்படுத்தும் நிலை உள்ளது.

கண்மாய்கள்

மேலும் வெம்பக்கோட்டை அணை பகுதியிலும் வல்லம்பட்டி கண்மாய், வெற்றிலையூரணி கண்மாய், கோபால சமுத்திரம் கண்மாய், விஜய கரிசல்குளம் நிறைபாண்டியன் கண்மாய், மீனாட்சிபுரம் கோட்டை கண்மாய் ஆகிய இடங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் உள்ளன. மேலாண்மறை நாடு ஆற்றுப்படுகையிலும் இந்த மரங்களே நிறைந்து காணப்படுகின்றன.

தமிழ்நாடு சிமெண்டு ஆலைக்கு சொந்தமான 1,160 ஏக்கர் பரப்பளவிலான காலி இடத்தில் எங்கு பார்த்தாலும் இந்த மரங்களே உள்ளன. தோட்டம் அமைத்து வளர்க்கப்படுவதைப்போல செழித்து வளர்ந்து காணப்படுகின்றன. எனவே பொதுப்பணித்துறையினரும் வருவாய்த்துறையினரும் இந்த விஷயத்தில் துரிதமாக செயல்பட்டு ஐகோர்ட்டு உத்தரவினை அமல் படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story