ராயபுரத்தில் தனியார் நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம்
ராயபுரத்தில் உள்ள தனியார் நிறுவன குடோனில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.
ராயபுரம்,
ராயபுரம் கிழக்குமாதா கோவில் தெருவில் தனியார் நிறுவன குடோன் ஒன்று உள்ளது. இங்கு 10 நிறுவனங்கள் தங்கள் நிறுவன பொருட்களை தனித்தனியாக வைத்து உள்ளனர்.
ராயபுரத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவருக்கு சொந்தமான பாலிதீன் பைகள், அட்டைப்பெட்டிகள் உள்ளிட்ட பேக்கிங் பொருட்கள் குடோனின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டு இருந்தது. இங்கு நேற்று வெல்டிங் வேலைகள் நடந்ததாக கூறப்படுகிறது. வேலை முடிந்தவுடன் குடோனை பூட்டி விட்டு சென்று விட்டனர். இரவு 8 மணி அளவில் இந்த குடோனில் தீப்பிடித்து எரிந்தது.
பொருட்கள் நாசம்உடனே அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் அருகில் இருந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான விளையாட்டுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கும், ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான டைல்ஸ் கடைக்கும் தீ பரவியது.
தகவல் அறிந்ததும் ராயபுரம், வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்பட 4 தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. மேலும் 10–க்கும் மேற்பட்ட குடிநீர் லாரிகளும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இரவு வரை தீயை அணைக்கும் பணி தொடர்ந்தது.
இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இருப்பினும் முழுமையாக தீயை அணைத்தபிறகே சேத மதிப்பு தெரிய வரும் என்று தெரிகிறது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.