மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு


மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 19 April 2017 4:15 AM IST (Updated: 19 April 2017 1:42 AM IST)
t-max-icont-min-icon

பல்லாவரத்தில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை, ரங்கா நகர், 4–வது தெருவை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 28). இவர் நேற்று முன்தினம் இரவு புழுதிவாக்கத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். பல்லாவரம் 200 அடி சாலையில் சென்றபோது பின்பக்கமாக தனது கழுத்தில் யாரோ தட்டுவதை விஜயலட்சுமி உணர்ந்தார்.

உடனடியாக அவர் திரும்பி பார்த்தபோது பின்னால் ‘ஹெல்மெட்’ அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி இதுபற்றி சிட்லபாக்கம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பெயிண்டர் மர்ம மரணம்

* திருமுல்லைவாயலை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ்(40). பெயிண்டரான இவர் நேற்று காலை அதே பகுதியில் உள்ள ஒரு வங்கி முன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* மீனம்பாக்கத்தில் பிரபல கார் நிறுவனத்தின் அருகில் மரக்கழிவுகள் கொட்டப்பட்ட குப்பை மேடு தீப்பிடித்து எரிந்தது. தாம்பரம், விமான நிலைய தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

* வியாசர்பாடியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மின்சார ரெயில் மோதி உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* ராயப்பேட்டை பி.எம். தர்கா சாலையில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்து போதைப்பொருள் விற்றதாக மாணிக்கம் (48) என்பவரை கைது செய்த போலீசார், 27 கிலோ மாவா போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ஐஸ்–அவுஸ் பகுதியில் போதைப்பொருள் விற்றதாக பூரணி (70) என்பவர் கைது செய்யப்பட்டார்.

* கோட்டூர்புரம் நாகாத்தம்மன் கோவில் அருகே மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறி கார்த்திக் (22) என்பவரை சிலர் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் அவர் காயம் அடைந்தார். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், சிவபிரசாத், முத்து ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

குண்டர் சட்டத்தில் கைது

* சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமி‌ஷனர் கரன்சின்கா உத்தரவிட்டார்.

* தியாகராயநகர் பஸ் நிலையம் அருகே நடந்து சென்றபோது அசோக்நகரை சேர்ந்த பாலகிருஷ்ணனிடம், செல்போன் பறித்துச்சென்றதாக பழைய குற்றவாளி சூர்யாவை (20) போலீசார் கைது செய்தனர்.

* கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிறுநீரக கோளாறுக்கு சிகிச்சை பெற்று வந்த அண்ணாநகரை சேர்ந்த சுந்தரம் (56) ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.


Next Story