திருப்பூரை வாட்டி வதைத்த 102 டிகிரி வெயில்


திருப்பூரை வாட்டி வதைத்த 102 டிகிரி வெயில்
x
தினத்தந்தி 19 April 2017 5:00 AM IST (Updated: 19 April 2017 1:45 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் நேற்று 102 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது. அனல்காற்று வீசியதால் வீதியில் நடமாட முடியாமல் மக்கள் அவதியடைந்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக அவதியுற்று வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நேற்று வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. பொதுமக்கள் பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் குடை எடுத்து செல்லவும். காற்றோட்டமான மெல்லிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதுபோல் தினமும் வழக்கமாக பருகும் குடிநீரை விட கூடுதலாக குடிநீர் பருக வேண்டும். வெயிலுக்கு ஏற்ற குளிர்பானங்களை அருந்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

திருப்பூரில் நேற்றுகாலை முதல் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்தது. நேரம் செல்ல, செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்தது. பகல் 12 மணியில் இருந்து 3 மணி வரை ரோட்டில் அனல்காற்று வீசியது. வீதியில் நடமாடுவதை மக்கள் தவிர்த்தனர். இருசக்கர வாகன ஓட்டிகள் ரோட்டில் செல்வதற்கு கடும் சிரமம் அடைந்தனர்.

முகத்தை மூடியபடி...

கல்லூரி மாணவிகள் துப்பட்டாவை தலை மற்றும் முகத்தை முழுவதுமாக மூடியபடி நடந்து சென்றதை காண முடிந்தது. அதுபோல் பெண்கள் குடைகளை ஏந்தியபடி வீதியில் நடந்து சென்றனர். பெண் துப்புரவு தொழிலாளர்கள் முகம் மற்றும் தலை முழுவதையும் துணியால் போர்த்திக்கொண்டு பணிகளை மேற்கொண்டனர்.

குழந்தைகளுடன் பஸ் நிலையத்துக்கு வந்தவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு தர்ப்பூசணி பழம், நுங்கு ஆகியவற்றை வாங்கிக்கொடுத்தனர். மேலும் எலுமிச்சை சாறு உள்ளிட்ட வெயிலுக்கு ஏற்ற பானங்களை ஆண்களும், பெண்களும் வாங்கி பருகினார்கள். கடந்த சில நாட்களை விட நேற்று திருப்பூரில் அதிக வெயில் கொளுத்தியது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று வெயில் அதிகமாக இருந்தது.

102 டிகிரி வெயில்

திருப்பூரில் நேற்று பகல் வெப்பநிலை 102.02 டிகிரியாக (38.9 செல்சியஸ்) பதிவாகி இருந்ததாக கோவை வேளாண்மை கல்லூரி காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் திருப்பூரில் 101 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. திருப்பூரில் கடந்த 2 நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைப்பதால் பகல் நேரங்களில் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள்.


Next Story