சென்னையில் இருந்து மஸ்கட்டுக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள அமெரிக்கா டாலர்கள் கடத்த முயற்சி தான்சானியா நாட்டை சேர்ந்தவர் சிக்கினார்
சென்னையில் இருந்து மஸ்கட்டுக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள அமெரிக்கா டாலர்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
இது தொடர்பாக தான்சானியா நாட்டை சேர்ந்தவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
அதிகாரிகள் கண்காணிப்புசென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மஸ்கட்டுக்கு விமானம் செல்ல இருந்தது. இந்த விமானத்தில் பெரும் அளவில் வெளிநாட்டு பணம் கடத்தப்பட இருப்பதாக சுங்க இலாகா பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து விமானத்தில் ஏற வந்த பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னைக்கு சுற்றுலா விசாவில் வந்துவிட்டு மஸ்கட்டுக்கு செல்ல தான்சானியா நாட்டை சேர்ந்த சுலைமான் (வயது 38) வந்திருந்தார்.
பறிமுதல்சந்தேகத்தின் பேரில் அவரை சுங்க இலாகா அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் அவர் கொண்டு வந்த பெட்டிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெட்டியில் ரகசிய அறை அமைத்து அதில் அமெரிக்கா டாலர்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இதை தொடர்ந்து மஸ்கட்டுக்கு கடத்தப்பட இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள அமெரிக்கா டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது ஹவாலா பணமா? கடத்தல் கும்பலுடன் சுலைமானுக்கு தொடர்பு உள்ளதா? என அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தான்சானியா நாட்டு தூதரக அதிகாரிகளுக்கும் தகவல் தரப்பட்டு உள்ளது.