தாம்பரம் அருகே கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டில் 165 பவுன் நகைகள் கொள்ளை ரூ.8 லட்சம் வைர நகைகளையும் திருடி சென்றனர்


தாம்பரம் அருகே கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டில் 165 பவுன் நகைகள் கொள்ளை ரூ.8 லட்சம் வைர நகைகளையும் திருடி சென்றனர்
x
தினத்தந்தி 19 April 2017 4:15 AM IST (Updated: 19 April 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் அருகே கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 165 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.8 லட்சம் மதிப்புடைய வைர நகைகள் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள சேலையூர் மாடம்பாக்கம் சரவணா நகர் 1–வது தெருவை சேர்ந்தவர் மைதிலி (வயது 64).

இவரது மகன் கார்த்திகேயன். தனியார் நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். கார்த்திகேயனுடன் அவரது தாயார் மைதிலி ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன் குடும்பத்தினருடன் டெல்லி சென்று விட்டார். வீட்டில் தாயார் மைதிலி தனியாக இருந்தார்.

தங்கம் மற்றும் வைர நகைகள்

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் மைதிலி வீட்டை பூட்டி விட்டு அருகில் சரஸ்வதி நகரில் உள்ள இளைய மகன் வீட்டிற்கு சென்றார். நேற்று காலையில் அவர் வீட்டிற்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள் பகுதி முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது.

வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 3 பீரோக்களை உடைத்து அதில் இருந்த 165 பவுன் தங்க நகைகள், ரூ.8 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், பங்கு பத்திரங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இது குறித்து மைதிலி சேலையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கொள்ளை நடந்த வீட்டின் அருகில் உள்ள வீடு பல மாதங்களாக பூட்டி கிடக்கிறது. மற்றொரு புறம் உள்ள வீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

மிளகாய் பொடியை தூவி

இந்நிலையில் மைதிலி வீட்டை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் இரவில் வீட்டின் பின்பக்க பகுதியில் உள்ள கதவை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

போலீசார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்து விடக்கூடாது என்பதற்காக கொள்ளையர்கள் வீட்டின் உள்ளே பல இடங்களில் மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story