ரெயில் விபத்து மீட்பு பணி ஒத்திகை நிகழ்ச்சியால் பரபரப்பு


ரெயில் விபத்து மீட்பு பணி ஒத்திகை நிகழ்ச்சியால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 April 2017 4:30 AM IST (Updated: 19 April 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி குட்ஷெட் யார்டில் நடந்த ரெயில் விபத்து மீட்பு பணி ஒத்திகை நிகழ்ச்சியால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டால் பயணிகளை மீட்பது எப்படி? என்பது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி திருச்சி குட்ஷெட் யார்டில் நேற்று நடந்தது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், ரெயில்வே பாதுகாப்பு குழுவினர், தீயணைப்பு வீரர்கள், ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து இந்த ஒத்திகையில் ஈடுபட்டனர்.

இதையொட்டி திருச்சி குட்ஷெட் யார்டில் ஒரு ரெயில் தடம்புரண்டு பெட்டி கவிழ்ந்து கிடப்பதாகவும், அதில் 15 பயணிகள் சிக்கியிருப்பதாகவும் திருச்சி கோட்ட ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 10 மணி அளவில் தகவல் வந்தது. இதையடுத்து அபாய சங்கு ஒலிக்கப்பட்டது.

மீட்பு பணி

இதைத்தொடர்ந்து திருச்சி கோட்ட ரெயில்வே முதுநிலை பாதுகாப்பு அதிகாரி கந்தசாமி தலைமையில் ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், மருத்துவ குழுவினர் உடனடியாக விபத்து மீட்பு ரெயிலில் புறப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அரக்கோணம் 4–வது பட்டாலியன் தேசிய பேரிடர் மீட்பு படையின் உதவி கமாண்டட் ராஜன் பாலு தலைமையில் 30–க்கும் மேற்பட்ட படைவீரர்களும், திருச்சி கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையர் சோமசேகர் தலைமையில் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களும், திருச்சி கண்டோன்மெண்ட் நிலைய அலுவலர் தனபால் தலைமையில் 15 தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். கோட்ட ரெயில்வே மேலாளர் அகர்வாலும் விரைந்து வந்தார்.

அங்கு தடம்புரண்டதுபோல் ரெயில் பெட்டி ஒன்று கவிழ்ந்து கிடந்தது. அதில் 6 பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடப்பதை போல இருந்தனர். மேலும் மனிதர்கள் போன்ற 9 பொம்மைகளும் காயமடைந்து சிக்கி கிடப்பதை போலவும் இருந்தது. இதையடுத்து அனைவரும் ஒருங்கிணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ரெயில் பெட்டியில் துளை...

தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த வீரர்கள், வெல்டிங் எந்திரம் மூலம் ரெயில் பெட்டியின் மேற்கூரையில் 2 இடங்களில் துளையிட்டும், பெட்டியின் பின்பக்கம், முன்பக்கம் துளைகள் போட்டும் அதன் வழியாக உள்ளே நுழைந்து பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும் பெட்டியின் அவசர ஜன்னல் கதவு வழியாகவும் தீயணைப்பு வீரர்கள், ரெயில்வே ஊழியர்கள் சென்று பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

பின்னர் அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதையடுத்து ஆம்புலன்சுகள் மூலம் அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பரபரப்பு

ரெயில் பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது போலவும், அதில் இருந்த பயணிகளை மீட்கும் செயல்களை மீட்பு குழுவினர் தத்ரூபமாக செய்து காட்டினர். அந்த வழியாக சென்றவர்கள், வாகன ஓட்டிகள் உண்மையில் விபத்து நடந்ததாக நினைத்து பதற்றமடைந்தனர். மேலும் அருகில் வந்து வேடிக்கை பார்த்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒத்திகை நிகழ்ச்சி என அறிந்த பின்னர், அவர்கள் நிம்மதி அடைந்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய மீட்பு பணி காலை 10.50 மணிக்கு முடிவடைந்தது. திருச்சியில் முதல் முறையாக தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து இந்த விபத்து மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story