அந்தியூர் பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் மழை: வீடுகள்– தொழிற்சாலை மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டு சேதம்
அந்தியூர் பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் மழை: 50 வீடுகள்– தொழிற்சாலை மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டு சேதம் கணக்கெடுக்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்
அந்தியூர்,
அந்தியூர் பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் 50 வீடுகள் மற்றும் ஒரு தொழிற்சாலையின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்தன. சேதம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சூறாவளிக்காற்றுஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த சூறாவளிக்காற்று நள்ளிரவு வரை தொடர்ந்து நீடித்தது. இதனால் அந்தியூர், செம்புளிச்சாம்பாளையம், சின்ன பருவாச்சி, காட்டூர், சிந்தக்கவுண்டன்பாளையம், செட்டிக்குட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் 50–க்கும் மேற்பட்ட வீடுகளின் ஓடு மற்றும் தகரத்தினால் ஆன மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்தன.
அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையத்தில் உள்ள தேங்காய் நார் தொழிற்சாலையின் தகர மேற்கூரை சூறாவளிக்காற்றால் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்தது. நல்லவேளையாக தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வேலை செய்யாததால் யாருக்கும் பாதிப்பு இல்லை.
கணக்கெடுக்கும் பணிமேலும் அந்தியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 50–க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் விழுந்தன. இதில் 2 மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததுடன், பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதன்காரணமாக செம்புளிச்சாம்பாளையம், சாத்தப்பன் கோவில், வட்டக்காடு, புதுக்காடு, ஊஞ்சக்காடு உள்பட 10–க்கும் மேற்பட்ட கிராமங்கள் நேற்று முன்தினம் இரவு முழுவதும் இருளில் மூழ்கின. உடனே மின்சார வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி தொடர்ந்து நேற்றும் நடந்தது.
அந்தியூர் சின்ன பருவாச்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியின் ஓட்டு மேற்கூரை தூக்கி வீசப்பட்டன. இதனால் மழை நீர் பள்ளிக்கூடத்துக்குள் விழுந்தது. இதில் பள்ளிக்கூடத்தில் மாணவ–மாணவிகளுக்கு பாடம் எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த குறிப்பேடுகள், விளக்க படங்கள், நோட்டு புத்தகங்கள் நனைந்து சேதம் ஆனது. வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டு பாதிப்படைந்தவர்கள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பவானி–சத்தியமங்கலம்இதேபோல் பவானி மற்றும் அதனை சுற்றியுள்ள புன்னம், சின்னவடமலைபாளையம், பெரியவடமலைபாளையம், செங்கோடம்பாளையம், ஜம்பை, தளவாய்ப்பேட்டை, காடையாம்பட்டி, சேர்வராயன்பாளையம், தொட்டிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் அந்த பகுதியில் இருந்த பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து நாசம் ஆனது. மேலும் 5–க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் சூறாவளிக்காற்றால் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்தன.
பவானி அருகே செங்கோடம்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்த 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் வேருடன் சாய்ந்து விழுந்ததுடன், அந்த பகுதியில் இருந்த 2 மின் கம்பங்களும் சாய்ந்தன. இதனால் சின்னவடமலைபாளையம், பெரியவடமலைபாளையம், புன்னம், தளவாய்ப்பேட்டை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் இருளில் மூழ்கின. சாய்ந்து விழுந்த மின் கம்பங்களை சரி செய்து மின் இணைப்பு கொடுக்கும் பணியில் மின்சார வாரி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். பவானி கடை வீதிகளில் வைக்கப்பட்டிருந்த கடைகளின் விளம்பர பலகைகள், பேனர்கள் ஆகியவையும் தூக்கி வீசப்பட்டன.
சத்தியமங்கலம் அருகே உள்ள புளியங்கோம்பை பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பல விவசாயிகளின் 800 வாழைகள் அடியோடு சாய்ந்தும், முறிந்தும் விழுந்தன.