தொழிலில் நஷ்டம் அடைந்ததால் தாய்க்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு மகன் தற்கொலை


தொழிலில் நஷ்டம் அடைந்ததால் தாய்க்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு மகன் தற்கொலை
x
தினத்தந்தி 19 April 2017 5:30 AM IST (Updated: 19 April 2017 2:07 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே தாய்க்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு மகன் தற்கொலை தொழிலில் நஷ்டம் அடைந்ததால் விபரீத முடிவு

கடத்தூர்

தொழிலில் நஷ்டம் அடைந்ததால், கோபி அருகே தாய்க்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு மகன் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தொழிலில் நஷ்டம்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நஞ்சகவுண்டன்பாளையம் சின்னசாமி வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 50). இவர் சொந்தமாக லாரி வைத்து மணல் வியாபாரம் செய்து வந்தார். அவருடைய மனைவி சாந்தாமணி (45).

இவர்களுக்கு நவீதா என்ற மகளும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். இதில் மணிகண்டன் பி.இ. படித்து வருகிறார். நவீதாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. விஜயகுமாருடன் அவருடைய தாய் அங்காத்தாளும்(90) வசித்துவந்தார். அவர் உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக கிடந்தார். அவரை விஜயகுமார் கவனித்து வந்தார்.

இந்த நிலையில் விஜயகுமாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அதை சமாளிக்க அவர் கடன் வாங்கியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

கடன் பிரச்சினையால் விஜயகுமார் மிகவும் அவதிப்பட்டு வந்தார்.

தாய் கொலை

இதனால் விஜயகுமாருக்கும் அவருடைய மனைவி சாந்தாமணிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் விஜயகுமார் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில் அவர் ‘வாழ்வதை விட இனி சாவதே மேல்’ என்ற முடிவுக்கு வந்தார். தான் இறந்தால் தன்னுடைய தாய் அங்காத்தாளை யார் கவனிப்பார் என்று நினைத்து வருத்தப்பட்டார்.

இதனால் தாய்க்கு முதலில் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

நேற்று மதியம் வீட்டில் விஜயகுமாரும், அங்காத்தாளும் மட்டுமே இருந்தனர். அப்போது விஜயகுமார் வீட்டின் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். தான் வாங்கி வந்த விஷத்தை முதலில் தாய் அங்காத்தாள் வாயில் ஊற்றினார். இதில் அவர் மயங்கிய நிலையில் பரிதாபமாக இறந்தார்.

மகன் தற்கொலை

பின்னர் விஜயகுமார் அந்த விஷத்தை குடித்தார். ஆனால் விஷத்தால் தனக்கு சாவு வராதோ என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது. இதனால் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்தார். இதையடுத்து வீட்டின் விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் வீட்டின் கதவு வெகுநேரமாக பூட்டி கிடப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். இதனால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. உடனே இதுகுறித்து கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சோகம்

தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொழிலில் நஷ்டம் அடைந்ததால் தாய்க்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story