திருச்சி உறையூரில் மைத்துனரை கடத்திய வியாபாரி கைது


திருச்சி உறையூரில் மைத்துனரை கடத்திய வியாபாரி கைது
x
தினத்தந்தி 19 April 2017 3:45 AM IST (Updated: 19 April 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி உறையூரில் மைத்துனரை கடத்திய வியாபாரியை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி உறையூர் கீரைக்கொல்லை தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 39). இவர் உறையூர் சாலை ரோட்டில் கண்காணிப்பு கேமராக்கள் மொத்தமாக விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி உமாமகேஷ்வரி(23). இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 16-ந்தேதி மதியம் சரவணன், தனது மனைவி அணிந்திருந்த நகைகளை வாங்கி விட்டு, அடித்து துன்புறுத்தி வயலூர் ரோடு சீனிவாச நகர் பகுதியில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டிற்கு அனுப்பியதாக தெரிகிறது. பின்னர் இரவில் உமாமகேஷ்வரியின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற சரவணன், தனது மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதனை உமாமகேஷ்வரியின் தம்பி தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவிற்காக காத்திருக்கும் பிரவீன் (17), சரவணனை தட்டி கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த சரவணன், பிரவீனுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இந்நிலையில் நேற்று மாலை சரவணன் தனது நண்பர்கள் குமார், மணிகண்டன் உள்பட 4 பேரை அழைத்து கொண்டு மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

கடத்தி சென்றனர்

அப்போது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த பிரவீனை, சரவணன் உள்பட 5 பேரும் சேர்ந்து அடித்து மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றனர். பின்னர் இரவில் அவர்கள் மறுபடியும் உமாமகேஷ்வரியின் பெற்றோர் வீடு அருகே பிரவீனை இறக்கி விட்டு தப்பி சென்றனர். கடத்தி சென்றவர்கள் அடித்து துன்புறுத்தியதால் பிரவீன் படுகாயமடைந்தார். இதனால் அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக உமாமகேஷ்வரி திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். தலைமறைவான குமார், மணிகண்டன் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story