திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம்


திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம்
x
தினத்தந்தி 19 April 2017 4:00 AM IST (Updated: 19 April 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் அடுத்த மாதம் (மே) 29-ந் தேதி நடக்கிறது.

திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாக திகழ்கிறது. திருவாரூரில் பிறந்தாலும், திருவாரூர் என்ற பெயரை சொன்னாலும் முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சர்வதோஷ பரிகார தலமாக விளங்கும், இக்கோவிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலக பிரசித்திப்பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை கொண்ட ஆழித்தேரின் எடை 300 டன். உயரம் 96 அடி.

ஆழித்தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சாமி வீதி உலா, தியாகராஜர் பாத தரிசனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. ஆனால் ஆழித்தேரோட்டம் நடைபெறும் தேதி மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

மே 29-ந் தேதி

இந்த நிலையில் அடுத்த மாதம் (மே) 29-ந் தேதி ஆழித்தேரோட்ட விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒருசில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆழித்தேரோட்ட விழாவையொட்டி தேரை அலங்கரிப்பதற்கான பணிகள் நேற்று தொடங்கின. இதில் தேரின் கூரைகள் அகற்றப்பட்டன. தேர் அலங்கார பணிகளுக்கு தேவைப்படும் மூங்கில் மரங்கள் ஒரு சில நாட்களில் திருவாரூர் வந்தடையும். அதன் பின்னர் பணிகள் துரிதமாக நடைபெறும்.

ஒரே நாளில்...

ஆழித்தேரோட்ட விழா கடந்த ஆண்டு 2 நாட்கள் நடைபெற்றது. இதனால் போலீஸ் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு சிரமம் ஏற்பட்டது. எனவே இந்த ஆண்டு ஆழித்தேர், விநாயகர், சுப்பிரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேரோட்டத்தையும் ஒரே நாளில் நடத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

Next Story