அன்னவாசலில் பனை மரங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


அன்னவாசலில் பனை மரங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 April 2017 4:15 AM IST (Updated: 19 April 2017 2:14 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசலில் உள்ள பனை மரங்களில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புபடை வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.

இலுப்பூர்,

அன்னவாசல் பல்லூரணி குளக்கரையில் கோவில் ஒன்று உள்ளது அந்த கோவிலின் பின்புற கரையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று மதியம் திடீரென சில பனைமரங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த தீயானது மளமளவென அருகில் உள்ள பனைமரங்களில் பரவி எரிய தொடங்கின. இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அன்னவாசல் போலீஸ் நிலையத்திற்கும், இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

போராடி அணைத்தனர்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு அலுவலர் விவேகானந்த் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் பனைமரங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி அணைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார், கிராமநிர்வாக அலுவலர் ரவிக்குமார் மற்றும் போலீசார் பார்வையிட்டனர்.

மேலும் பனைமரங்களுக்கு மர்மநபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது வெயிலின் தாக்கத்தால் தீப் பிடித்ததா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story