பாரபட்சமின்றி வறட்சி நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்


பாரபட்சமின்றி வறட்சி நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 April 2017 3:45 AM IST (Updated: 19 April 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க கோரி திருமானூர் அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருமானூர்,

அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி வறட்சி நிவாரணம் வழங்க கோரி அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள சன்னாவூர் கிராமத்தில் விவசாயிகள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள், சன்னாவூர் (தெற்கு) கிராமத்தில் அரசு வழங்கியுள்ள வறட்சி நிவாரணம் 50 சதவீத விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்றும், பட்டா இல்லாத நபர்களுக்கு வறட்சி நிவாரணம் கிடைத்துள்ளது என்றும், அரசு வழங்கியுள்ள வறட்சி நிவாரணத்தை பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வழங்காமல் ஒரு தலைப்பட்சமாக வழங்கியுள்ள கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும் பல மாதங்களாக கிராம நிர்வாக அலுவலர் இல்லாமல் பொறுப்பு அலுவலர் மட்டும் உள்ள சன்னாவூர் கிராமத்திற்கு நிரந்தரமாக கிராம நிர்வாக அலுவலர் நியமனம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மரங்களை போட்டனர்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் திருச்சியிலிருந்து சன்னாவூர் வழியாக அரியலூர் செல்லும் அரசு பஸ்சை மறித்தும், பஸ்சின் முன்பு மரங்களை போட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அரியலூர் மண்டல துணை தாசில்தார் கோவிந்தராஜ், அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில், விரைவில் சன்னாவூர் கிராமத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் நியமிக்கப்படுவர் என்றும், வறட்சி நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் சன்னாவூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. 

Next Story