மதுக்கடை அமைப்பதை எதிர்த்து சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


மதுக்கடை அமைப்பதை எதிர்த்து சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 19 April 2017 4:15 AM IST (Updated: 19 April 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

திருவண்டார்கோவில் மெயின்ரோட்டில் மதுக்கடை அமைப்பதை எதிர்த்து சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

திருபுவனை,

மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்டார்கோவில் மெயின்ரோட்டில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுக்கடைகளுக்கு போராட்டம்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் தமிழகம், புதுச்சேரியில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன. ஆனால் இந்த கடைகளுக்கு பதிலாக வேறு இடத்தில் மதுக்கடைகள் அமைக்க அதிகாரிகள் இடம் தேர்வு செய்கிறார்கள். குடியிருப்பு பகுதிகளில் இந்த மதுக்கடைகளை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதையும் மீறி திறக்கப்படும் மதுக்கடைகளுக்குள் புகுந்து மதுபாட்டில்களை எடுத்து ரோட்டில் உடைத்து பெண்கள் போராட்டம் நடத்திய சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

மெயின்ரோட்டில் மறியல்

இந்தநிலையில் புதுவை மாநிலம் திருவண்டார்கோவிலில் இருந்து கொத்தபுரிநத்தம் செல்லும் சாலையில் 2 மதுக்கடைகளை திறக்க ஏற்பாடு நடந்தது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்று கலால் துறையிடம் புகார் செய்தனர்.

ஆனால் இதை பொருட்படுத்தாமல் திருவண்டார்கோவிலில் இருந்து கொத்தபுரிநத்தம் செல்லும் சாலையில் உள்ள ஞானசுந்தரி நகரில் மதுக்கடை திறக்க ஏற்பாடுகள் செய்து வந்தனர். இதை அறிந்த அப்பகுதி மக்கள் 100–க்கும் மேற்பட்டவர்கள் திருவண்டார்கோவில் மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாணவிகளுக்கு பாதுகாப்பு இருக்காது

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருபுவனை போலீஸ் உதவி சப்–இன்ஸ்பெக்டர் சீனுவாசன் மற்றும் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்களிடம் பொதுமக்கள் கூறுகையில், இங்குள்ள தொழிற்சாலைகளில் பெண்கள் அதிகாலை முதல் இரவு வரை வேலைக்கு சென்று வருகிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் தற்போது இரவில் இந்த சாலை வழியாக பயம் இல்லாமல் வருகிறார்கள். ஆனால் மதுக்கடை வந்தால் இந்த பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. குடிபிரியர்களால் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதுவதால் இங்கு மதுக்கடை திறக்க திறக்கக்கூடாது என்று தெரிவித்தனர்.

இந்த கோரிக்கை குறித்து கலால் துறையிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story