ரோடியர் மில்லை திறக்கக்கோரி பஞ்சாலை தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பஞ்சாலை தொழிலாளர்கள் நேற்று தட்டாஞ்சாவடியில் உள்ள தொழில்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
புதுச்சேரி
புதுவை ரோடியர் மில்லை திறந்து முதலில் பி மற்றும் சி யூனிட்டுகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கான சீருடைக்கான அரசு ஆர்டர் ரூ.11 கோடி, அரசு மருத்துவமனை துணி ஆர்டரை கொடுத்து மில்லை இயக்க அரசு உதவ வேண்டும். அதன்பின்பு படிப்படியாக ராணுவ சீருடை, பாராசூட் துணி வகைகளின் ஆர்டர்களை பெற்று மில்லை இயக்கி பழைய நிலையில் லாபத்தில் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக முதல்–அமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் அடங்கிய ஒரு உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பஞ்சாலை தொழிலாளர்கள் நேற்று தட்டாஞ்சாவடியில் உள்ள தொழில்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்துக்கு பஞ்சாலை தொழிலாளர் சங்க தலைவர் ரவி தலைமை தாங்கினார். செயலாளர் அபிசேகம் உள்பட தொழிலாளர்கள் பலரும் இந்த தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டனர்.