இருசக்கர வாகனங்களில் செல்வோர் மே 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம்


இருசக்கர வாகனங்களில் செல்வோர் மே 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம்
x
தினத்தந்தி 19 April 2017 5:30 AM IST (Updated: 19 April 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

மேலும் அவகாசம் வழங்கும் திட்டம் இல்லை இருசக்கர வாகனங்களில் செல்வோர் மே 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் நாராயணசாமி திட்டவட்ட அறிவிப்பு

புதுச்சேரி,

புதுவை அரசின் சமூக நலத்துறை சார்பில் ஊனத்தை ஆரம்ப நிலையில் கண்டறிந்து தடுப்பது எப்படி? என்ற தலைப்பில் நெல்லித்தோப்பு கீர்த்தி மகாலில் நேற்று விழிப்புணர்வு முகாம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். சமூக நலத்துறை இயக்குனர் மீனாகுமாரி வரவேற்றுப் பேசினார்.

நாராயணசாமி தொடங்கி வைத்தார்

முகாமை முதல்- அமைச்சர் நாராயணசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

அங்கன்வாடி ஊழியர்கள் மக்களோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள். அரசின் திட்டங்கள், சலுகைகள் எந்த அளவுக்கு மக்களை சென்று சேருகிறது? என்பதை அறிந்து அதை நீங்கள் எங்களுக்கு தெரிவிக்கவேண்டும். புதுவையில் 30 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களில் சுமார் 21 ஆயிரம் பேருக்கு அரசு உதவிகள் வழங்கப்படுகிறது.

எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்கள்

புதுவை அரசு சார்பில் அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் தலா 20 கிலோ அரிசி, முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் காப்பீடு திட்டம், இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

திட்டங்கள் சம்பந்தப்பட்டவர்களை சென்றடைகிறதா? என்பதை அறியும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

இதுதொடர்பாக உங்களிடம் அறிக்கை கேட்டிருந்தோம். திட்டங்கள் மக்களை சரியாக சென்றடையாவிட்டால் அதை மாற்றியமைக்க முடியும். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு புதுச்சேரியில் திட்டங்களை செயல் படுத்தி வருகிறோம். அங்கன்வாடி ஊழியர்களும் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

விரைவில் சம்பளம்

உறவு வழியில் திருமணம் செய்வதால் உடல் உறுப்புகளில் குறைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குழந்தை பிறந்தபின் உடல்நலம் பாதிக்கப்படாமல் இருக்க என்னென்ன செய்யவேண்டும் என்பதை பெண்கள் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மகளிர் மேம்பாட்டுத்துறையில் திட்டங்களுக்காக ரூ.52 கோடி செலவிடப்படுகிறது. இந்த நிதியை முறையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அங்கன்வாடி ஊழியர் களுக்கு சம்பளம் வழங்க ரூ.9 கோடி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் உங்களுக்கான சம்பளம் வழங்கப்படும். போலியோ இல்லாத நாடு இந்தியா என்று ஐ.நா.சபை அங்கீகரித்து உள்ளது.

ஹெல்மெட் கட்டாயம்


இப்போது 2 சக்கர வாகன விபத்துகளினால்தான் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள். அதனால்தான் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறியுள்ளோம். இதற்காக மேலும் அவகாசம் அளித்து தேதியை தள்ளிப்போட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். உயிரிழப்புகள் தடுக்கப்பட ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். இதற்கான அவகாசம் நீடிக்கப்படமாட்டாது. புதுவை மாநிலத்தில் உள்ளவர்கள் மே 1-ந்தேதி முதல் கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும். இதற்காக மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு விண்ணப்பிப்பவர்கள் பெரும்பாலும் விபத்துகளில் பாதிக்கப்பட்டுதான் நிவாரணம் கேட்கின்றனர். கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். 1,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

அமைச்சர் கந்தசாமி

விழாவில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

புதுவை மாநிலத்தில் ஊனமுற்றவர்களின் எண்ணிக்கையை குறைக்க நாம் தயாராக வேண்டும். நெருங்கிய உறவினர் வழியில் திருமணம் செய்வதை தவிர்த்தால் பெரும்பாலான ஊனத்தை தவிர்க்கலாம். புதுவை மாநிலத்தில் அரசு திட்டங்கள் மூலம் பயனடைபவர்கள் நிலை குறித்து கணக்கெடுக்குமாறு கேட்டிருந்தோம். ஆனால் இதுவரை அதுகுறித்து யாரும் விவரங்களை தரவில்லை.

நமது முதல்-அமைச்சர் நாள்தோறும் 18 மணிநேரத்துக்கு குறையாமல் மக்கள் பணி செய்து வருகிறார். அவர் பல மாநிலங்களில் கட்சி பொறுப்புகளை வகித்துள்ளார். இப்போது இந்த சிறிய மாநிலத்தில் பணி செய்து வருகிறார். அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

மாற்றத்திற்கு தயாராக வேண்டும்

இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, பத்திரப்பதிவுக்கு தடை விதித்தது உள்ளிட்டவற்றால் மாநிலத்தின் வருவாய் குறைந்தது. இப்போது உங்களுக்கு சம்பளம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் மாதாமாதம் இலவச அரிசி வழங்கி வந்தோம். தற்போது இலவச அரிசி வழங்க கோப்பு அனுப்பி உள்ளோம். அந்த கோப்பு எப்போது திரும்பிவரும் என்று தெரியவில்லை? முதல்- அமைச்சரும், அமைச்சர்களும் மாநிலத்தில் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து உழைத்து வருகிறோம். அதேபோல் அரசு ஊழியர்களும் மாற்றத்திற்கு தயாராக வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.

விழாவில் சமூக நலத்துறை துணை இயக்குனர் சரோஜினி, உதவி இயக்குனர் ரத்னா, குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி விஜயா உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story