திருவள்ளூர் அருகே புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை


திருவள்ளூர் அருகே புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 19 April 2017 5:45 AM IST (Updated: 19 April 2017 3:18 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த அதிகத்தூர் கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 52). வக்கீல். அவர் 3 முறை ஒன்றிய கவுன்சிலராக இருந்துள்ளார். தற்போது புரட்சி பாரதம் கட்சியில் கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை வேலாயுதம் தன்னுடைய வீட்டின் அருகே உள்ள அதிகத்தூர் ஏரிக்கரைக்கு சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பதறிப்போன அவருடைய குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். அப்போது அதிகத்தூர் ஏரிக்கரையில் வேலாயுதம் வெட்டிக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மறியல் போராட்டம்

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், துணை சூப்பிரண்டு புகழேந்தி, கடம்பத்தூர் இன்ஸ்பெக்டர் பாலு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். இதை தொடர்ந்து வேலாயுதத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அப்போது அங்கு வந்த அதிகத்தூர் கிராம மக்கள், புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள், வக்கீல்கள் வேலாயுதத்தின் கொலைக்கு காரணமான குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி ஆஸ்பத்திரி எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

உடனே போலீசார் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.


Next Story