மானூர் அருகே திருமணமான 15 நாட்களில் புதுப்பெண் தூக்கு போட்டு சாவு உதவி கலெக்டர் விசாரணை
மானூர் அருகே திருமணமான 15 நாட்களில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நெல்லை உதவி கலெக்டர் மேல் விசாரணை நடந்து வருகிறது.
மானூர்,
மானூர் அருகே திருமணமான 15 நாட்களில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நெல்லை உதவி கலெக்டர் மேல் விசாரணை நடந்து வருகிறது.
புதுப்பெண்தூத்துக்குடி மாவட்டம் கலப்பபட்டியை சேர்ந்த முருகன் மனைவி பாப்பா. இவருடைய மூத்த மகள் மாலதி (வயது 21). இவருக்கும், ஓட்டப்பிடாரம் தாலுகா கொத்தாளி கிராமத்தை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் மகன் முப்புடாதி என்பவருக்கும் கடந்த 2–ந் தேதி திருமணம் நடந்தது. மானூர் அருகே கங்கைகொண்டானில் உள்ள டயர் கம்பெனியில் முப்புடாதி வேலை பார்த்து வந்தார். திருமணம் முடிந்து ஒரு வாரம் கழித்து, மானூர் அருகே நாஞ்சான்குளத்தில் ஒரு வாடகை வீட்டில் புதுமண தம்பதியினர் குடியேறினர்.
மாலதி பிளஸ்–2 படித்து விட்டு, லேப் டெக்னீசியன் பயிற்சியும் முடித்துள்ளார். எனவே அவர் நெல்லை அருகே குறிச்சியில் உள்ள ஸ்கேன் சென்டரில் வேலை பார்த்து வந்தார். தனது கணவர் 9–ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்பதை நினைத்து மாலதி மிகவும் மனவேதனையில் இருந்து வந்தாராம். மாலதி காலையில் வேலைக்கு சென்றுவிட்டு இரவு 8 மணி அளவில் வீடு திரும்பி விடுவாராம். அதன் பின்னர் தான் முப்புடாதி இரவு வேலைக்கு புறப்பட்டு செல்வாராம்.
தூக்கில் தொங்கினார்கடந்த 17–ந் தேதி இரவில் வழக்கம் போல முப்புடாதி வேலைக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் காலையில் மாலதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு செல்லும் போது வீட்டு சாவியை பக்கத்து வீட்டில் கொடுக்க மறந்து சாவியுடன் சென்று விட்டாராம். அதன் பின்னர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த முப்புடாதி, வீட்டுச்சாவி கிடைக்காததால் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று பகல் பொழுதை கழித்துள்ளார். பின்னர் இரவு வேலைக்கு செல்வதற்காக முப்புடாதி தனது வீட்டுக்கு வந்துள்ளார். கதவு உள்புறமாக பூட்டியிருந்ததால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே துப்பட்டாவால் மாலதி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். மாலதியின் உடலை கீழே இறக்கி வைத்துவிட்டு, இதுபற்றி மாலதியின் தாயார் பாப்பாவுக்கு தகவல் கொடுத்தார்.
உதவி கலெக்டர் விசாரணைஇதை கேள்விப்பட்டதும் மாலதியின் தாயார் மற்றும் உறவினர்கள் கதறியபடி விரைந்து வந்தனர். பின்னர் இதுபற்றி மானூர் போலீசில் பாப்பா புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மாலதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்தார். நெல்லை உதவி கலெக்டர் மைதிலி மற்றும் தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 15 நாட்களில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.