திருப்பூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
அரசு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் வட்ட கிளை சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அம்சராஜ், மாவட்ட பொருளாளர் முருகேசன், துணை தலைவர்கள் கணபதி, ஞானசேகரன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், 8–வது ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிரந்தர ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பள தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25–ந்தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதனால், சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இதில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.