சாணார்பட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
சாணார்பட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
கோபால்பட்டி,
சாணார்பட்டி ஒன்றியம் சிலுவத்தூரில் கடந்த 6 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திண்டுக்கல்– செங்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மருதமுத்து, துணைவட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 நாட்களில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.