திண்டுக்கல் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார்: ஒருவர் பலி
திண்டுக்கல் அருகே, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார் ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்
சின்னாளபட்டி
கோவை மாவட்டம் சூலூர் கரையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 55). இவருடைய மனைவி செல்வகுமாரி (47). இவருடைய அண்ணன் மணிக்குமார் (49), உறவினர் பிரபாகரன் ஆகிய 4 பேரும் ஒரு காரில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சென்று விட்டு கோவைக்கு நேற்று திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
காரை பிரபாகரன் ஓட்டி வந்தார். திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியை அடுத்த கலிக்கம்பட்டி பிரிவு என்னுமிடத்தில் வந்த போது, காரின் பின்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பாலத்தின் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் மணிக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.