ராமேசுவரம்–கோவை சிறப்பு ரெயில் பாலக்காடு வழியாக செல்வதால் பயணிகள் அவதி


ராமேசுவரம்–கோவை சிறப்பு ரெயில் பாலக்காடு வழியாக செல்வதால் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 20 April 2017 4:15 AM IST (Updated: 20 April 2017 1:26 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம்–கோவை சிறப்பு ரெயில் பாலக்காடு வழியாக செல்வதால் பயணிகள் அவதி பரமக்குடியில் நின்று செல்ல உத்தரவு

மதுரை

ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக கோவை செல்லும் சிறப்பு ரெயில் பரமக்குடி ரெயில்நிலையத்தில் நின்று செல்ல மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த ரெயில் பாலக்காடு வழியாக செல்வதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

ராமேசுவரம்–கோவை

மதுரை கோட்ட ரெயில்வேயில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக கோவைக்கு வாரம் இருமுறை சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, கோவையில் இருந்து இயக்கப்படும் ரெயில்(வ.எண்.06062) வருகிற 21–ந் தேதி முதல் ஜூன் மாதம் 30–ந் தேதி வரை வாரந்தோறும் வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து வருகிற 22–ந் தேதி முதல் ஜூலை மாதம் 1–ந் தேதி வரை வாரந்தோறும் சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படுகிறது.

கோவை–ராமேசுவரம் சிறப்பு ரெயில் கோவையில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு மாலை 3.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மாலை 6.40 மணிக்கு ராமேசுவரம் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் ராமேசுவரம்–கோவை சிறப்பு ரெயில்(06061) ராமேசுவரத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு காலை 11.10 மணிக்கு மதுரை ரெயில்நிலையம் வந்தடைகிறது. மாலை 5.30 மணிக்கு கோவை சென்றடைகிறது.

பரமக்குடியில் நிற்கும்

இந்த ரெயில் ராமநாதபுரம், மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, பாலக்காடு டவுன், பாலக்காடு ஆகிய ரெயில்நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே, இந்த ரெயிலுக்கு பரமக்குடி ரெயில்நிலையத்தில் நிறுத்தம் வேண்டும் என்று ராமநாதபுரம் எம்.பி. அன்வர்ராஜா மற்றும் பரமக்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் நீனு இத்தேரா இந்த ரெயிலை பரமக்குடியில் நின்று செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இந்த ரெயில் இருமார்க்கங்களிலும் பரமக்குடி ரெயில்நிலையத்தில் நின்று செல்லும். ராமேசுவரத்தில் இருந்து புறப்படும் ரெயில் பரமக்குடி ரெயில்நிலையத்துக்கு 9.28 மணிக்கும், கோவையில் இருந்து புறப்படும் ரெயில் பரமக்குடி ரெயில்நிலையத்துக்கு மாலை 4.25 மணிக்கும் வந்து சேரும்.

இந்த ரெயிலில் 2 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி முன்பதிவு பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி முன்பதிவு பெட்டிகள், 8 பொதுப்பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் இணைந்த பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

பாலக்காடு சுற்றி செல்வதால்...

இதற்கிடையே, இந்த சிறப்பு ரெயில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட போது, பொள்ளாச்சி–போத்தனூர் அகல ரெயில்பாதை பணிக்கு ரெயில்வே பாதுகாப்பு கமி‌ஷனர்(சி.ஆர்.எஸ்.) அனுமதி கிடைக்கவில்லை. இதனால், இந்த ரெயில் பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு சென்று அங்கிருந்து கோவை ரெயில் நிலையம் வந்தடைகிறது.

அத்துடன் சுமார் 2 மணி நேரம் கூடுதலாக பயணம் செய்ய வேண்டியுள்ளது. தூரம் அதிகரிப்பதால் கட்டணமும் அதிகமாகிறது. அதாவது, ராமேசுவரத்தில் இருந்து பொள்ளாச்சி, போத்தனூர் வழியாக கோவை செல்ல 394 கி.மீ. தூரமே உள்ளது. ஆனால், பாலக்காடு சுற்றி செல்வதால் 461 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டும்.

பொள்ளாச்சி–போத்தனூர்

இதனால் ரூ.160 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மதுரையில் இருந்து 250 கி.மீ. தூரம் உள்ள கோவைக்கு பஸ்சில் செல்ல ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த ரெயிலில் 300 கி.மீ. தூரம் செல்ல ரூ.115 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், 6 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.

தற்போது பொள்ளாச்சி–போத்தனூர் அகல ரெயில்பாதையில் 70 கி.மீ.வேகத்தில் ரெயில்கள் இயக்க ரெயில்வே பாதுகாப்பு கமி‌ஷனர் அனுமதி வழங்கியுள்ளார். எனவே, இந்த ரெயிலை, பொள்ளாச்சியில் இருந்து போத்தனூர் வழியாக கோவை இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சிறப்புக்கட்டண ரெயிலாக இயக்குவதால் பயணிகள் முன்பதிவு செய்ய முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். ஒவ்வொரு நாளும் கட்டணம் மாறுபடும் என்பதால் இந்த சிறப்பு கட்டண திட்டத்துக்கு பயணிகள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதேபோல, எர்ணாகுளம்–ராமேசுவரம் சிறப்புக்கட்டண சிறப்பு ரெயிலும்(வ.எண்.06035/06036) இரு மார்க்கங்களிலும் பரமக்குடி ரெயில்நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story