ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா வளாகத்தில் திடீர் தீ விபத்து
சிறுதாவூர் பங்களா வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் சிறுதாவூரில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பங்களா உள்ளது. அந்த பங்களா வளாகத்தில் விளை நிலங்கள் உள்ளன.
தற்போது இங்கு பயிர்கள் எதுவும் பயிரிடப்படவில்லை. விளைநிலங்களில் தற்போது புல் புதர்கள் காய்ந்த நிலையில் உள்ளன.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் விளை நிலங்களில் காய்ந்த நிலையில் இருந்த புல் புதர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இது குறித்து காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி மனோகரனுக்கு தகவல் கிடைத்தது.
காரணம் என்ன?அவரது உத்தரவின் பேரில் சிறுசேரியில் இருந்து தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் இருந்து 2 தண்ணீர் லாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றன. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பங்களாவுக்குள் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
தீ விபத்தில் 20 ஏக்கர் பரப்பளவிலான புல் புதர்கள் தீயில் கருகின.