கும்மிடிப்பூண்டி பகுதிகளில் உள்ள வீடுகளில் திருடிய 3 வாலிபர்கள் கைது
கும்மிடிப்பூண்டி பகுதிகளில் உள்ள வீடுகளில் திருடிய வாலிபர்கள் 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி பஜாரை ஒட்டியுள்ள அருண் நகரில் வசித்து வருபவர் காளிதாஸ் (வயது 54). மத்திய ரிசர்வ் போலீசில் தலைமை காவலராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். கடந்த மார்ச் மாதம் 15–ந் தேதி நள்ளிரவு இவரது வீட்டில் இருந்து 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் திருட்டு போனது.
அதே போல கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8–ந் தேதி கும்மிடிப்பூண்டி காந்தி நகரில் உள்ள வேன் டிரைவர் ஏழுமலை (48) வீட்டில் பூட்டை உடைத்து 8 பவுன் நகை மற்றும் டி.வி.யை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இந்த சம்பவங்களில் தொடர்புடைய மர்மநபர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவிட்டார்.
3 பேர் கைதுஅதன்பேரில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம் மற்றும் அலிபாபு ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த 2 வழக்குகளிலும் தொடர்புடைய காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகரை சேர்ந்த துலுக்காணம் (24), ஏழுமலை (24), நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முருகன் (28) ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், அவர்கள் கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியிலும் ஒரு வீட்டில் திருடி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 10 பவுன் தங்கநகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.