தாராவியில் தலையில் கியாஸ் சிலிண்டர் விழுந்து சிறுவன் பலி
வீட்டு வாசலில் படுத்து இருந்தபோது, தலையில் கியாஸ் சிலிண்டர் விழுந்து 7 வயது சிறுவன் பலியான சம்பவம் தாராவியில் நடந்துள்ளது.
மும்பை,
வீட்டு வாசலில் படுத்து இருந்தபோது, தலையில் கியாஸ் சிலிண்டர் விழுந்து 7 வயது சிறுவன் பலியான பரிதாப சம்பவம் தாராவியில் நடந்துள்ளது.
வாசலில் தூங்கிய சிறுவன்மும்பை தாராவி டோர்வாடா, மகாரானா பிரதாப் நகரில் உள்ள விஷ்குஷ் குடிசைப்பகுதியை சேர்ந்தவர் சகீல் சேக்(வயது38). இவரது மனைவி பெரோஷ் காத்துன்(30). இவர்களின் மகன் பிலால் சேக் (7). இவன் தாராவியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்தான்.
நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சிறுவன் வீட்டின் கதவை திறந்து வைத்து வாசலில் தலையை வைத்து தூங்கிக்கொண்டு இருந்தான்.
சிலிண்டர் தலையில் விழுந்ததுஇந்தநிலையில் மதியம் 1 மணியளவில் பாந்திராவில் உள்ள கியாஸ் ஏஜென்சியில் பணிபுரியும் மகாகிருஷ்ணன்(26) என்ற வாலிபர் அந்த பகுதியில் உள்ள ஒரு மெஸ்சிற்கு 19 கிலோ எடைகொண்ட சமையல் கியாஸ் சிலிண்டரை வினியோகம் செய்ய வந்தார். குறுகலான அந்த சந்தில் வாலிபர் கியாஸ் சிலிண்டரை செங்குத்தாக தோளில் தூக்கி வைத்தவாறு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டர் சிறுவனின் வீட்டின் எதிர்புறம் உள்ள இரும்பு சட்டத்தில் எதிர்பாராதவிதமாக தட்டியது.
இதனால் அந்த வாலிபர் நிலை தடுமாறினார். அப்போது கியாஸ் சிலிண்டர் அவரின் தோளில் இருந்து நழுவி வாசலில் தூங்கிக்கொண்டு இருந்த சிறுவன் தலை மீது விழுந்தது.
தாராவியில் சோகம்இதில், தலை நசுங்கியதில் சிறுவனின் காது, மூக்கு, தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. இதைப்பார்த்து பதறிப்போன மகாகிருஷ்ணன் உடனடியாக சிறுவன் பிலால் சேக்கை தூக்கிக்கொண்டு சயான் ஆஸ்பத்திரிக்கு ஓடினார். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து விபத்து வழக்கு பதிவு செய்த போலீசார், மகாகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கியாஸ் சிலிண்டர் தலையில் விழுந்து சிறுவன் பலியான சம்பவம் தாராவி பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.