தா.பழூர் மகாகாளியம்மன் கோவிலில் திருநடன உற்சவம்


தா.பழூர் மகாகாளியம்மன் கோவிலில் திருநடன உற்சவம்
x
தினத்தந்தி 20 April 2017 4:00 AM IST (Updated: 20 April 2017 2:35 AM IST)
t-max-icont-min-icon

தா.பழூர் மகாகாளியம்மன் கோவிலில் திருநடன உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 2011-ம் ஆண்டு திருநடன உற்சவ விழா நடைபெற்றது. அதன்பிறகு அந்த திருவிழா நடத்தப்படாமல் இருந்தது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாக இருந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம நாட்டாண்மைகள் ஒன்று சேர்ந்து இந்த ஆண்டு திருவிழா நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து செல்லியம்மன் வீதிஉலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநடன உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலை மகாகாளியம்மன் புறப்பாடு நடந்தது. மகாகாளியம்மன் போல் வேடம் அணிந்த ஒருவர் கோவிலில் இருந்து புறப்பட்டு தா.பழூர் கடைவீதி வழியாக திருநடனம் ஆடி வந்தார். பின்னர் அவர் செல்லியம்மன் கோவிலை சுற்றி வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அபிஷேகம்

முன்னதாக, அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், களபம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீதியில் சென்று திருநடனமாடுவார். அப்போது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி அருள்வாக்கு கூறுவார். பின்னர் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றால் அர்ச்சனை செய்து வழிபடுவர். இதையடுத்து வருகிற 22-ந்தேதி ஊஞ்சல் சேவை, பாம்பாட்ட நடனம் நடைபெறுகிறது. திருநடன உற்சவ ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம நாட்டாண்மைகள், திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story