கார் மரத்தில் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி 7 பேர் படுகாயம்


கார் மரத்தில் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி 7 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 20 April 2017 2:40 AM IST (Updated: 20 April 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

பன்வெல் அருகே சாலையோர மரத்தில் கார் மோதிய கோர விபத்தில் மும்பையை சேர்ந்த 2 பெண்கள் பலி. 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

மும்பை,

பன்வெல் அருகே சாலையோர மரத்தில் கார் மோதிய கோர விபத்தில் மும்பையை சேர்ந்த 2 பெண்கள் பலி ஆனார்கள். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

மரத்தில் மோதியது

மும்பை மலாடு கிழக்கு பான்டோங்கிரியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 9 பேர் புனேயில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் சென்றனர். பின்னர் அங்கிருந்து காரில் மும்பை நோக்கி வந்துகொண்டிருந்தனர். இவர்கள் வந்த கார் நேற்று காலை 6 மணியளவில் புனே– மும்பை நெடுஞ்சாலையில் பன்வெல் அருகில் உள்ள பதனா மலைப்பகுதியில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி, சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி ரத்தவெள்ளத்தில் அலறினர்.

2 பெண்கள் பலி

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் காரின் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கிய நிலையில் 2 பெண்களின் உடலை மீட்டனர். மேலும் படுகாயங்களுடன் இடிபாடுகளில் சிக்கி இருந்த 7 பேரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பலியான பெண்களின் பெயர் ருக்ஷானா(வயது30), லலாபி(40) என்பது தெரியவந்துள்ளது.


Next Story