நித்திரவிளையில் காரில் கடத்திய 500 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல்


நித்திரவிளையில் காரில் கடத்திய 500 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 20 April 2017 3:45 AM IST (Updated: 20 April 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

நித்திரவிளையில் காரில் கடத்திய 500 கிலோ ரே‌ஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நித்திரவிளை,

குமரி மாவட்டத்தில் ரே‌ஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி, மானிய விலையில் கொடுக்கப்படும் மண்எண்ணெய் ஆகியவற்றை சிலர் மலிவு விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

இதை தடுக்க மாவட்டத்தின் எல்லையோரம் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன், வருவாய் அதிகாரிகள் ரோந்து சென்று கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனாலும், கடத்தல்காரர்கள் நூதன முறையில் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வாகன சோதனை

இந்தநிலையில் பறக்கும்படை தாசில்தார் இக்னேசியஸ் சேவியர், துணை தாசில்தார் சந்திரசேகர், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று காலை நித்திரவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக கேரளாவை நோக்கி சென்ற காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால், டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் காரை ஜீப்பில் துரத்தி சென்றனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் துரத்திசென்று மங்காடு பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். உடனே, கார் டிரைவர் இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

500 கிலோ அரிசி பறிமுதல்

இதையடுத்து அதிகாரிகள் காரை சோதனையிட்ட போது அதில் சிறு சிறு மூடைகளில் 500 கிலோ ரே‌ஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அரிசியுடன் காரை பறிமுதல் செய்தனர்.


Next Story