பன்வெல், பிவண்டி, மாலேகாவ் மாநகராட்சிகளுக்கு அடுத்த மாதம் 24–ந்தேதி தேர்தல்


பன்வெல், பிவண்டி, மாலேகாவ் மாநகராட்சிகளுக்கு அடுத்த மாதம் 24–ந்தேதி தேர்தல்
x
தினத்தந்தி 20 April 2017 2:44 AM IST (Updated: 20 April 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

பன்வெல், பிவண்டி மற்றும் மாலேகாவ் மாநகராட்சிகளுக்கு அடுத்த மாதம் 24–ந்தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் றிவித்துள்ளது.

மும்பை

பன்வெல், பிவண்டி மற்றும் மாலேகாவ் மாநகராட்சிகளுக்கு அடுத்த மாதம் 24–ந்தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மே 24–ந்தேதி தேர்தல்

மராட்டியத்தில் உள்ள பிவண்டி– நிஜாம்பூர் மற்றும் மாலேகாவ் மாநகராட்சிகளின் பதவி காலம் முறையே ஜூன் 10, 14–ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. இதேப்போல புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பன்வெல் மாநகராட்சிக்கும் இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை. இந்தநிலையில் மாநில தேர்தல் ஆணையர் ஜே.எஸ்.சகாரியா நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

பன்வெல், பிவண்டி– நிஜாம்பூர் மற்றும் மாலேகாவ் மாநகராட்சிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (மே) 24–ந்தேதி நடைபெறும். எனவே இந்த மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உடனடியாக (நேற்று முதல்) தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வருகிறது.

வேட்பு மனு தாக்கல்

3 மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 29–ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 6–ந் தேதி வரை நடக்கிறது. மே 8–ந்தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். மே 11–ந்தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள். 12–ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்படும்.

மே 24–ந் தேதி காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 26–ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

முதல் தேர்தல்

முதல் முறையாக தேர்தல் நடைபெற உள்ள பன்வெல் மாநகராட்சியில் 4 லட்சத்து 25 ஆயிரத்து 453 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 78 வார்டுகள் உள்ளன.

பிவண்டி– நிஜாம்பூர் மாநகராட்சியில் உள்ள 90 வார்டுகளில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 253 வாக்காளர்களும், மாலேகாவ் மாநகராட்சியில் உள்ள 84 வார்டுகளில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 320 வாக்காளர்கள் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story