பாடகர் சோனு நிகம், தலையை மொட்டை அடித்து கொண்டதால் பரபரப்பு


பாடகர் சோனு நிகம், தலையை மொட்டை அடித்து கொண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 April 2017 2:51 AM IST (Updated: 20 April 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

பிரபல பின்னணி பாடகர் சோனு நிகம் குறிப்பிட்ட மதத்தினர் ஒலிப்பெருக்கி பயன்படுத்துவது குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு கண்டனம் எழுந்தது.

மும்பை,

பிரபல பின்னணி பாடகர் சோனு நிகம் குறிப்பிட்ட மதத்தினர் ஒலிப்பெருக்கி பயன்படுத்துவது குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு கண்டனம் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் திடீரென தலையை மொட்டை அடித்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சோனு நிகம்

குறிப்பிட்ட மதத்தினர் ஒலிப்பெருக்கி பயன்படுத்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்து, பிரபல இந்தி பின்னணி பாடகர் சோனு நிகம் டுவிட்டரில் சமீபத்தில் கருத்து தெரிவித்தார். காலையில் எழுந்தவுடன் அவர்களது மதவழிபாட்டை நான் ஒலிப்பெருக்கியில் கேட்க வேண்டிய அவசியம் என்ன? என்று அவர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு கொல்கத்தாவை சேர்ந்த மத தலைவர் ஒருவர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சோனு நிகமின் தலையை மொட்டை அடித்து, அவருக்கு செருப்பு மாலை அணிவிப்பவருக்கு ரூ.10 லட்சம் ரொக்க பரிசு தருவதாக அறிவித்தார். இதனால், இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில், சோனு நிகம் நேற்று மும்பையில் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, தன்னுடைய கருத்து குறித்து அவர் விளக்கம் அளித்து கூறியதாவது:-

மன்னிக்கவும்

ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் நான் பேசினேன். எனது கருத்தை தெரிவிக்க எனக்கு உரிமை இருக்கிறது. இதனை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். ஒலிப்பெருக்கி ஒன்றும் அத்தியாவசியம் அல்ல. ஒலிப்பெருக்கிகள் எந்த மதத்துக்கும் சொந்தமானதும் அல்ல. நான் ஏதாவது தவறாக பேசியிருந்தால், தயவுசெய்து மன்னிக்கவும். சமூகம் சார்ந்த விஷயத்தை தான் பேச எண்ணினேனே தவிர, மத விஷயத்தை அல்ல.

நான் ஒரு மதச்சார்பற்ற நபர். நடுநிலை வகிப்பவன். என்னை போன்ற நடுநிலையாளர்களை காண்பது மிகவும் அரிது. ஆகையால், நானும் இங்கு சிறுபான்மை பிரிவை சார்ந்தவன் தான். இன்றைக்கு ஆலிம் ஹக்கீம் என்ற சிகை அலங்கார நிபுணர் இங்கு வந்து, எனது தலையை மொட்டை அடிப்பார். சொன்னபடி, ரூ.10 லட்சத்தை தயாராக வைத்திருங்கள்.

இவ்வாறு சோனு நிகம் தெரிவித்தார்.

அத்துடன், சிகை அலங்கார நிபுணர் அங்கு வந்தார். உடனடியாக சோனு நிகம் ஒரு அறைக்குள் அவரை அழைத்து சென்று தன்னுடைய தலையை மொட்டை அடித்து கொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

மதகுரு பேட்டி

எனினும், சோனு நிகமின் செய்கையால் சமாதானம் அடையாத குறிப்பிட்ட மத தலைவர், “மொட்டை மட்டும் தான் சோனு நிகம் அடித்திருக்கிறார். செருப்பு மாலை பற்றியும் நான் பேசியிருந்தேன்” என்றார்.

அத்துடன், சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாடகர் சோனு நிகம் மீது அவுரங்காபாத் ஜின்சி போலீஸ் நிலையத்தில் ஒருவர் புகார் செய்துள்ளார்.

43 வயதான பின்னணி பாடகர் சோனு நிகம், தமிழ் திரைப்படங்களிலும் பாடல்களை பாடியிருக்கிறார். ஆர்யா நடித்த ‘மதராசப்பட்டிணம்’ படத்தில் இவர் பாடிய ‘ஆருயிரே’ என்ற பாடல் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story