சேலம் செவ்வாய்பேட்டையில் 2 ஆயிரத்து 20 கிலோ கலப்பட பெருஞ்சீரகம் பறிமுதல்


சேலம் செவ்வாய்பேட்டையில் 2 ஆயிரத்து 20 கிலோ கலப்பட பெருஞ்சீரகம் பறிமுதல்
x
தினத்தந்தி 20 April 2017 4:00 AM IST (Updated: 20 April 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

சேலம் செவ்வாய்பேட்டையில் 2 ஆயிரத்து 20 கிலோ கலப்பட பெருஞ்சீரகத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சேலம்,

சேலம் செவ்வாய்பேட்டை பால்மார்க்கெட் பகுதியில் மளிகை பொருட்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யும் 50–க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ளனர். இவர்களில் பலர் உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் பெறாமல் பொருட்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் கலப்பட மளிகை பொருட்கள் விற்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

அதன்பேரில், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் சூரமங்கலம் உணவு பாதுகாப்பு அலுவலர் திருமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று அங்கு சென்று 6 வியாபாரிகளின் குடோன்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள பொருட்களில் கலப்படம் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா? என்று அதிகாரிகள் சோதனை செய்தனர்.

2 ஆயிரத்து 20 கிலோ பறிமுதல்

அப்போது 2 வியாபாரிகளின் குடோன்களில், அதிகளவு சாயம் ஏற்றப்பட்ட பெருஞ்சீரகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பச்சை நிறம் அதிகமாக இருப்பதால் இதில் கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். இதையடுத்து 50 கிலோ எடை கொண்ட 38 பெருஞ்சீரகம் மூட்டைகளையும், 40 கிலோ எடை கொண்ட 3 பெருஞ்சீரகம் மூட்டைகளையும் என மொத்தம் 2 ஆயிரத்து 20 கிலோ பெருஞ்சீரகத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் பெருஞ்சீரக மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்து ஆய்வுக்காக சென்னை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த மூட்டைகள் அங்குள்ள குடோன்களில் தனியாக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 வியாபாரிகளுக்கு அதிகாரிகள் நோட்டீசு வழங்கினர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறும் போது, ‘மளிகை பொருட்களில் கலப்படம் செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து சில வியாபாரிகளின் குடோன்களின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அதிகளவு சாயம் ஏற்றப்பட்டு கலப்படம் செய்யப்பட்ட 2 ஆயிரத்து 20 கிலோ பெருஞ்சீரகத்தை பறிமுதல் செய்துள்ளோம். இதுதொடர்பாக 2 வியாபாரிகளுக்கு நோட்டீசு வழங்கி உள்ளோம். கடந்த மாதம், மாவட்டத்தில் தரமற்ற எண்ணெய் தயாரித்த 4 நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன‘ என்றார்.


Next Story