மராட்டிய அரசுக்கு அஜித்பவார் கண்டனம்


மராட்டிய அரசுக்கு அஜித்பவார் கண்டனம்
x
தினத்தந்தி 20 April 2017 2:56 AM IST (Updated: 20 April 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

மும்பை– நாக்பூர் விரைவுச்சாலை திட்டம் விவசாயிகளின் வாழ்வை அழித்துவிடும் என்று மராட்டிய அரசுக்கு அஜித்பவார் கண்டனம் தெரிவித்தார்.

மும்பை

மும்பை– நாக்பூர் விரைவுச்சாலை திட்டம் விவசாயிகளின் வாழ்வை அழித்துவிடும் என்று மராட்டிய அரசுக்கு அஜித்பவார் கண்டனம் தெரிவித்தார்.

சங்கார்ஷ் யாத்திரை

பயிர் கடன் தள்ளுபடியை வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் ‘சங்கார்ஷ் யாத்திரை’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் தொடர் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். 2–ம் கட்டமாக இந்த பேரணி நேற்று பால்கர் மாவட்டம் சகாப்பூரை வந்தடைந்தது. இதையொட்டி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் கூறியதாவது:–

மராட்டிய அரசின் மும்பை– நாக்பூர் விரைவுச்சாலை திட்டம் வளர்ச்சிக்கான பாதை அல்ல. அது விவசாயிகளின் வாழ்வை அழித்துவிடும் திட்டம். மும்பை மற்றும் நாக்பூரை இணைக்கக்கூடிய இந்த சாலை திட்டத்தால், 56 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதனால், சகாப்பூர், இகாத்புரி, சின்னார் மற்றும் கோபர்காவ் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது வளமான, நீர்ப்பாசன வசதி மிகுந்த நிலத்தை இழக்க நேரிடும்.

ரூ.1 லட்சம் கோடி

ஒருபக்கம் விவசாய கடனை தள்ளுபடி செய்ய போதிய நிதி இல்லை என்று தேவேந்திர பட்னாவிஸ் அரசு சொல்கிறது. மற்றொரு பக்கம், மும்பை– நாக்பூர் விரைவுச்சாலை திட்டத்துக்காக ரூ.46 ஆயிரம் கோடி செலவிட போகிறது. இதேபோல், மும்பை– ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்துக்கு ரூ.1 லட்சம் கோடி செலவிட அரசு திட்டமிட்டிருக்கிறது.

மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு தொழில் அதிபர்களுக்கான கடன் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தது. ஆனால், மராட்டியத்தில் விவசாயிகளுக்கான பயிர் கடன் ரூ.30 ஆயிரத்தை தள்ளுபடி செய்ய நிதி இல்லை என்கிறார்கள்.

இவ்வாறு அஜித்பவார் தெரிவித்தார்.


Next Story