தலைவாசல், தம்மம்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
தலைவாசல், தம்மம்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தலைவாசல்,
தலைவாசல் அருகே உள்ள நத்தக்காடு கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் கடந்த 20 நாட்களாக பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று நத்தக்காடு பஸ் நிறுத்தம் அருகே வீரகனூர் ரோட்டில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், அவர்கள் சீரான குடிநீர் வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த தலைவாசல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகணேஷ், வீரகனூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பகடப்பாடிஇதேபோல் தலைவாசல் அருகே உள்ள பகடப்பாடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சீராக குடிநீர் வழங்கக்கோரி அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகலறிந்த தலைவாசல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகணேஷ் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
போக்குவரத்து பாதிப்புதம்மம்பட்டி பேரூராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று 14, 15 ஆகிய வார்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் திடீரென பேரூராட்சி அலுவலகம் அருகே திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென அலுவலகம் முன்பு உள்ள சாலையில் குடிநீர் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் மாதேஸ்வரன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர் கூறுகையில், உங்கள் பகுதிக்கு ஆழ்துளை கிணறு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. சீராக குடிநீர் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.